அமித் ஷா உடல்நிலை குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், உள் துறை அமைச்சருமான அமித் ஷா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 4ஆம் தேதி ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் குணமடைந்து சில நாட்களுக்குப் பிறகு வீடு திரும்பினார்.
எனினும் உடல்வலி மற்றும் சோர்வு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையிலுள்ள போஸ்ட் கொரோனா வார்டில் அமித் ஷா கடந்த 18ஆம் தேதி மீண்டும் அனுமதிக்கப்பட்டார். அந்த சமயத்தில் அறிக்கை வெளியிட்ட மருத்துவமனை நிர்வாகம், அமித் ஷா நலமாக இருக்கிறார். மருத்துவமனையில் இருந்தபடி வழக்கமான பணிகளை கவனிப்பார் என்று தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை இன்று (ஆகஸ்ட் 29) வெளியிட்ட அறிக்கையில், “உள் துறை அமைச்சர் அமித் ஷா எய்ம்ஸ் மருத்துவமனையின் போஸ்ட் கொரோனா கேர் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். தற்போது, அவர் குணமடைந்துள்ளார். விரைவில் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்புவார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனையின் ஊடகப் பிரிவு தலைவர் ஆர்த்தி விஜி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
கொரோனாவிலிருந்து மீண்ட பிறகும் மருத்துவமனையில் அமித் ஷா அனுமதிக்கப்பட்டதால், பாஜகவினர் அதிர்ச்சியடைந்தனர். அவர் நலம்பெற வேண்டும் என பிரார்த்தனைகளிலும் ஈடுபட்டனர். எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு அவரது உடல்நிலை குறித்து அதிகாரப்பூர்வமாக தகவல்கள் ஏதும் வெளிவராத நிலையில், தற்போது அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
**எழில்**
�,”