புதுச்சேரி: செவிலியர்களுக்கான பிபிஇ கிட் தரமானதா?

politics

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கொரோனா தொற்று பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்துவரும் நிலையில் மருத்துவத்துறையினருக்கு வழங்கும் தற்காப்பு உபகரணங்கள் தரமானதாக இல்லை என்று அரசு மருத்துவமனையின் மூத்த செவிலியர் ஒருவர் கூறியுள்ளார்.

சட்டமன்றத் தேர்தல் முடிந்து முதல்வராக ரங்கசாமி பதவியேற்றுக்கொண்டார். மக்கள் ஆட்சி நடைபெற்றுவரும் நிலையில் முதல்வர் ரங்கசாமி கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்கு பிறகு தனிமையிலிருந்து வருவதால், துணை நிலை ஆளுநர் (பொறுப்பு) தமிழிசை சௌந்தரராஜன் நிர்வாகத்தை நடத்திவருவதால் முக்கிய பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியாமல் புதுச்சேரி பிரதேசத்தின் மக்கள் தவித்து வருகிறார்கள்.

புதுச்சேரியில் நேற்று 1448 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 34 பேர் இறந்துள்ளனர். பாதிப்பு காரணமாக அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வருகின்றனர்.

இந்த நிலையில் புதுச்சேரி முதன்மை அரசு மருத்துவமனையின் மூத்த செவிலியர் ராதிகா ஒரு கண்ணீர் ஆடியோ வெளியிட்டுள்ளார். அதில் ”எங்களுக்கு எந்த நஷ்ட ஈடும் தேவையில்லை தரமான பிபிஇ(பர்சனல் புரடக்ட்டிவ் எக்யூப்மெண்ட்) கிட் வாங்கி கொடுத்தால் போதும். இதுகுறித்து சுகாதார செயலாளருக்கும், கவர்னருக்கும் கடிதம் அனுப்பிவிட்டேன். பிபிஇ கிட்டை தரமானதாக இல்லாததால் அதை ஒரு மணி நேரம்கூட போடமுடியாமல், மூச்சுத்திணறல் வந்து பிபிஇ கிட் கழட்டி போட்டுவிட்டு நிற்கிறது பிள்ளைகள் (செவிலியர்கள்). நாங்கள் எவ்வளவுதான் மன்றாடுவது, நாங்கள் வந்து மருத்துவமனையில் வேலை செய்கிறோம், அதனால், மருத்துவமனையில் நடக்கும் விசயங்களை வெளியில் சொல்லக்கூடாது என இருந்தோம்.

சாதாரண நாட்களாக இருந்தால் வெளியில் வந்து போராட்டம் செய்திருப்போம். இப்போது போராட்டம் செய்தால் செவிலியர்களுக்கு மக்களைப்பற்றி கவலை இல்லை என்று விமர்சனம் செய்வார்கள். அதனால் வேறுவழியில்லாமல் எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு பணிசெய்கிறோம்.

கவர்னர் மற்றும் சுகாதார செயலாளருக்கு தகவல் கொடுத்து ஒரு மாதம் ஆகியும், இதுவரை எந்த பதிலும் இல்லை. நானும் வெளியில் ஸ்பான்ஸர் வாங்கி கொடுத்து வருகிறேன். இதுவரையில் ஒரு லட்சத்து 56 ஆயிரம் ஸ்பான்ஸராக வாங்கி கொடுத்திருக்கிறேன். இதுபோல் எத்தனை நாளைக்குப் பிச்சை எடுத்துக் கொடுப்பது” என்று கண்ணீர் விடுகிறார்.

இதுகுறித்து மருத்துவமனையில் வேலை செய்யும் செவிலியர்களிடம் விசாரித்தபோது, “நாங்கள் சேவை செய்யத் தயார். ஆனால் தற்பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் எப்படி வேலை செய்யமுடியும். இரண்டு மாதத்துக்கு நான்கு என் 95 மாஸ்க்குகளும், வார்டுக்கு போனால் ஒரு சர்ஜிகல் மாஸ்க்கும் கொடுப்பார்கள். ஹேண்ட் வாஷ் இல்லை, சானிடைசர் இல்லை, கேப் இல்லை, தரமான பிபிஇ கிட் இல்லை” என்று புலம்பினர்.

இதுகுறித்து செவிலியர் சங்கத்தின் நிர்வாகி பாக்கியவதியிடம் கேட்டபோது, “GH, MH, IDMH, ESI,PH என மருத்துவமனைகள் உள்ளது. இதில் சுமார்1500 செவிலியர்கள் மட்டுமே இருக்கிறோம். கொரோனா தொற்று காரணமாக சில செவிலியர்கள் ஓய்வில் இருப்பதால், அவர்களுக்கு பதிலாகக் கூடுதலாகப் பணி செய்துவருகிறோம். கடந்த 11 நாட்களில் ஒரு டாக்டர், ஒரு செவிலியர், ஒரு ஹெல்த் இன்ஸ்பெக்டர், இரண்டு செவிலியர் உதவியாளர், பணியாளர்கள் உட்பட 7பேர் இறந்துள்ளார்கள். ஊழியர் நியமன விதியில் பொதுவார்டில் 6 நோயாளிகளுக்கு ஒரு செவிலியர், ஐசியூ வார்டில் ஒரு நோயாளிக்கு ஒரு செவிலியர் இருக்கவேண்டும். ஆனால் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 70 நோயாளிகளுக்கு இரண்டு செவிலியர்களும், புதுச்சேரி அரசு மருத்துவமனையில் 32 நோயாளிகளுக்கு இரண்டு செவிலியர்கள் என பணி செய்து வருகிறார்கள்.

அறைக்குள் இருந்து அறிக்கைகள் விடுபவர்கள் எங்கள் நிலையை ஏன் புரிந்துக்கொள்வதில்லை. நாங்களும் மனிதர்கள்தானே” என்கிறார் வருத்தத்துடன்.

**-வணங்காமுடி**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *