gமெரினாவில் ஸ்டாலின் நடத்தும் விவாதம்!

Published On:

| By Balaji

திமுக தலைவராக கலைஞர் இருந்த காலகட்டத்தில், மாலை நேரத்தில் நேரம் கிடைத்தால் மெரினா கடற்கரைக்குச் சென்றுவிடுவார். அங்கே கலங்கரை விளக்கம் அருகே கடற்கரை மணலில் நாற்காலியைப் போட்டுக் கொண்டு கட்சிப் பிரச்சினைகள், அரசுப் பிரச்சினைகள் வரை அனைத்தையும் பேசுவார். அலுவலக ரீதியாக அமர்ந்து பேசுவதை விட இப்படி கடற்கரையில் அமர்ந்து அமைச்சர்கள், நிர்வாகிகளுடன் விவாதித்து முடிவெடுப்பதில் கலைஞருக்கு ஒரு அலாதியான ஆர்வம்.

பல்வேறு விஷயங்களில் கலைஞரிடம் ஒரே அலைவரிசையில் இருக்கும் இப்போதைய திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் மெரினாவின் மீது அலாதியான ஈடுபாடு ஏற்பட்டிருக்கிறது. ஸ்டாலின் சென்னையில் இருக்கும்பட்சத்தில், அன்று எதுவும் நிகழ்ச்சிகள் இல்லாத பட்சத்தில் இரவு எட்டு மணிக்கு மேல் மெரினாவில் இருக்கும் கலைஞர் நினைவிடத்துக்கு செல்வதை வழக்கமாகவே வைத்திருக்கிறார் ஸ்டாலின். அன்றைக்கு எந்த நிர்வாகிகள் அருகே இருக்கிறார்களோ அவர்களுடன் கலைஞரின் நினைவிடம் செல்லும் ஸ்டாலின் அங்கே அமர்ந்து கட்சிப் பிரச்னைகள் பலவற்றையும் பேசிவிட்டு அதன் பிறகே இல்லம் திரும்புகிறார்.

இப்படித்தான் நேற்று திருச்சி மாசெவும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு உள்ளிட்ட நிர்வாகிகளோடு கலைஞரின் நினைவிடம் சென்றிருக்கிறார் ஸ்டாலின். அங்கே வீசும் காற்றில் கலைஞரின் குரலும் கலந்திருப்பதைப் போலவே உணர்வதாக சொல்ல கூட இருந்தவர்கள் நெகிழ்ந்துவிட்டனர்.

அப்படியே உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஸ்டாலின் பேச்சு திரும்பியது. ‘என்னண்ணே… உங்க மாவட்டத்துல காங்கிரசை ஒதுக்கித் தள்ளிட்டீங்கண்ணு ஃபேஸ்புக், வாட்ஸப்ல காங்கிரஸ்காரங்க புலம்புறாங்களே?’ என்று ஸ்டாலின் கேட்க, ‘இந்த வார்டு வேணும், அந்த வார்டு வேணும்னு அதிகாரமா கேக்குறாங்க காங்கிரஸ்காரங்க. ஆனா அந்த வார்டோட எல்லை என்ன, எந்த பகுதி எந்த வார்டுல இருக்குனு கூட தெரியல. மக்களோடயும் நிர்வாகிகளோடயும் கனெக்‌ஷன் இருந்தாதானே அதெல்லாம் தெரியும். என் முன்னாடியே அன்பழகன் வார்டு பற்றி கேள்வி கேட்குறாரு, காங்கிரஸ்காரங்க தப்பு தப்பா பதில் சொல்றாங்க. ,மொதல்ல வார்டு பற்றி வாய்ப்பாடு படிச்சுட்டு வாங்கனுனு சொல்லி அனுப்பிட்டோம்’” என்று சொல்லி நேரு சிரிக்க, மெரினா காற்றில் ஸ்டாலினும் புன்னகை பூத்திருக்கிறார்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share