வேளாண் மண்டலம் அறிவிப்பு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படுவதாகவும், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களுக்கு அனுமதி அளிக்க மாட்டோம் எனவும் சேலம் மாவட்டம் தலைவாசலில் கடந்த 9ஆம் தேதி நடந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதற்கு தமிழக அரசியல் கட்சிகள், விவசாயிகள் சங்கத்தினர் வரவேற்பு தெரிவித்தனர். இதனை சட்டமாக நிறைவேற்ற வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
இந்த நிலையில் சென்னை மதுரவாயலில் இன்று (பிப்ரவரி 12) நடந்த திருமண விழாவில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், “காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதல்வர் அறிவித்துள்ளார். இது யாரை ஏமாற்றுவதற்கு?” என்று கேள்வி எழுப்பியவர்,
“பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டுமென தொடர்ந்து திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் குரல் கொடுத்துவருகின்றன. டெல்டா பகுதி விவசாயிகள் அதற்காக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். வேளாண் மண்டலமாக அறிவித்தால் வேளாண் பெருங்குடி மக்கள் பயன்பெறுவார்கள். பல கொடுமைகளில் சிக்கித்தவிக்கும் மக்களுக்கு அது ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்பதால் அது வரவேற்கத்தக்கது” என்றும் தெரிவித்தார்.
எனினும், அதனை யார் அறிவிக்க வேண்டும் என்கிற சராசரி அறிவு கூட முதல்வருக்கு இல்லை என்று குற்றம்சாட்டிய ஸ்டாலின், “காவிரி டெல்டாவை வேளாண் மண்டலமாக மத்திய அரசுதான் அறிவிக்க வேண்டும். ஆனால், முதல்வரின் அறிவிப்புக்கு இங்கிருக்கக் கூடியவர்கள் ஒன்றுசேர்ந்து பாராட்டு விழா எடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். முதல்வரின் அறிவிப்பு முதலில் கெஜட்டில் வெளியிடப்பட்டு, மத்திய அரசிடம் அனுமதி வாங்க வேண்டும். ஏனெனில், மத்திய அரசுதான் சிறப்பு மண்டலத்திற்கான நிதியை ஒதுக்கீடு செய்கிறது” என்ற தகவலையும் சுட்டிக்காட்டினார்.
மேலும், “ஏற்கனவே 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் நிலை என்ன? அந்த கிணறுகள் மூடப்பட்டுவிட்டதா?. கிணறுகளை மூடிவிட்டு, ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களுக்கு அனுமதி இல்லை என்று உத்தரவிட்ட பிறகுதான் வேளாண் மண்டலமாக அறிவிக்க முடியும். அதனை நிறைவேற்ற வேண்டியதும் மத்திய அரசுதான். மத்திய அரசு அனுமதியளித்துவிட்டதா? இதனை ஏன் முதல்வர் வெளியில் சொல்லத் தயங்குகிறார்?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
**த.எழிலரசன்**
�,