:யாருடன் கூட்டணி?: கமல்

Published On:

| By Balaji

மக்கள் நீதி மய்யம் மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கிறது. இந்நிலையில் இன்று (பிப்ரவரி 28) சென்னை தியாகராய நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் மூத்த பத்திரிகையாளர்களுடன் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்துரையாடினார். பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார்.

2021 சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் நாளை வாக்காளர்கள் எண்ணிக்கொண்டிருப்பது போல் மக்கள் நீதி மய்யமும் ஆர்வமாக எண்ணிக் கொண்டிருக்கிறது என்று தெரிவித்தவரிடம், தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதில் அளித்த அவர், ”அந்த பாலத்தை வரும் போது கடப்போம். இப்போதே அங்குப் போகலாம், இங்குப் போகலாம் என்று முடிவு செய்ய முடியாது” என்றார்.

உங்களைத் தலைமையாக. அதாவது முதல்வர் வேட்பாளராக ஏற்பவர்களுடன் தான் கூட்டணி என்று நிபந்தனை வைப்பீர்களா என்ற கேள்விக்கு, ”அதுகுறித்து முடிவு செய்யப்படும். இந்த தலைமைக்குச் செல்ல வேண்டும் என்ற ஆர்வமும் நம்பிக்கையும் உள்ளது. ஆனால் முன்கூட்டியே இதுகுறித்து சொல்லமுடியாது” என்று பதிலளித்தார்.

தமிழகத்தில் திராவிட கட்சிகள் இல்லாமல் ஒரு தலைமையை உருவாக்கி ஆட்சி அமைப்பது என்பது சாத்தியமா என்ற கேள்விக்கு, ”அதை எதிர்காலம் உங்களுக்குப் பதில் சொல்லும். எங்கள் செயல்முறைகளைச் செய்து காண்பித்த பிறகு மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதே உங்களுக்குப் பதிலாய் அமையும். மக்கள் தீர்ப்புக்காகக் காத்துக்கொண்டிருக்கிறோம். மக்கள் மீது நம்பிக்கை இருக்கிறது” என்று கூறினார்.

நடிகர் ரஜினிகாந்த் குறித்துப் பேசுகையில், ”நானும் ரஜினிகாந்த்தும் தமிழ் நாட்டின் மேம்பாடு குறித்துதான் பேசிவருகிறோம். அதில் கொள்கை ரீதியான மாறுதல் இருக்கலாம் என்பதெல்லாம் பரவலாக இருக்கக்கூடிய பேச்சு. ஆனால் சமீபத்தில் அவர் சொல்லிக் கொண்டிருக்கும் விஷயங்கள் எல்லாம் சற்றே மாறுபட்ட, தமிழகத்தின், தேசத்தின் நலன் நோக்கிய அணி சாராத நிலை இருப்பதாகத் தெரிகிறது. அதனால் அவருடன் பேச்சுவார்த்தை நடத்த எல்லா வாய்ப்புகளும் இருக்கிறது. தேவைப்பட்டால் இணைவோம் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறோம்” என்றார். தமிழகத்தை மாற்றுவதற்கு முனைப்பான தலைமை வேண்டும் என்றும் குறிப்பிட்டார் கமல்.

கடந்த மக்களவைத் தேர்தலின் போது மக்கள் நீதி மய்யம் ஒரு சில இடங்களில் கணிசமான வாக்குகளைப் பெற்றிருந்தது. இதன் பின் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும், தற்போது 2021 தேர்தலுக்காக ஆயத்தமாகி வருகிறது மநீம. ஆனால் 2021 சட்ட மன்றத் தேர்தலில் கட்சி தொடங்கிப் போட்டியிடுவோம் என்று ரஜினி கூறியிருந்த நிலையில், தற்போது வரை கட்சி பெயரைக் கூட அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

**கவிபிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share