தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 14ஆம் தேதி தொடங்கியது. தற்போது பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாளான இன்று (பிப்ரவரி 18) ஜல்லிக்கட்டில் மாடுபிடிப்பது தொடர்பான பேச்சால் அவையில் சிரிப்பொலி எழுந்தது.
பேரவையில் அதிமுக உறுப்பினர் பேசுகையில், துணை முதல்வர் பன்னீர்செல்வம் பெயரை குறிப்பிடும் போது ஜல்லிக்கட்டு நாயகர் என புகழ்ந்துரைத்தார். இதனையடுத்து, குறுக்கிட்ட எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், “பன்னீர்செல்வத்தை ஜல்லிக்கட்டு நாயகன் என்கிறார்கள். அவர் எப்போது ஜல்லிக்கட்டில் மாடு பிடித்தார்” என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு சுகாதாரத் துறை விஜயபாஸ்கர், “ஜல்லிக்கட்டு சட்டத்தை நிறைவேற்றித் தந்த காரணத்தால் பன்னீர்செல்வத்தை ஜல்லிக்கட்டு நாயகன் என்று சொல்கிறார்கள்” என்றார்.
உடனே துரைமுருகன், “அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பன்னீர்செல்வம் மாடுபிடித்தால் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் பார்க்க ஆவலாக உள்ளோம்” என்று சொன்னார்.
இதனையடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர், “புதுக்கோட்டை ஜல்லிக்கட்டில் துரைமுருகன் மாடு பிடிக்கத் தயார் என்றால் அதற்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்துத்தர தயாராக இருக்கிறோம்” என்று கூற அவையே சிரிப்பலையில் மூழ்கியது.
**த.எழிலரசன்**
�,