கோயில்கள் சேதப்படுத்தப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கந்த சஷ்டி கவச வரிகளை விமர்சனம் செய்தது தொடர்பாக பெரியாரிய உணர்வாளர்களுக்கும், இந்து அமைப்பினருக்கும் இடையே வார்த்தை மோதல் நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக கோவை சுந்தராபுரத்தில் தந்தை பெரியார் சிலை காவி சாயம் ஊற்றி அவமதிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் கோவை ரயில் நிலையம் முன்பு உள்ள விநாயகர் கோயில், டவுன்ஹால் பகுதியிலுள்ள மாகாளியம்மன் கோயில், கோட்டைமேடு பகுதியிலுள்ள விநாயகர் கோயில் முன்பு பழைய டயர்களுக்கு தீ வைக்கப்பட்டதோடு, கோயில் முன்பு உள்ள பொருள்களும் சேதப்படுத்தப்பட்டிருந்தது.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “கோவையில் நேற்று மூன்று கோயில்கள் சேதப்படுத்தப்பட்டது மிகவும் கண்டனத்திற்குரியது. பேரிடர் காலத்தில் அதிமுக்கியப் பிரச்சினைகளிலிருந்து, பொது கவனத்தை திசை திருப்பா தவண்ணம், குற்றம் புரிந்தோர் உடனடியாக சட்டத்தின் முன்னே நிறுத்தப்படுவதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
கந்த சஷ்டி கவசம் அவமதிக்கப்பட்டதற்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோலவே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, “மூன்று கோயில்கள் சேதப்படுத்தப்பட்டதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இத்தகைய நடவடிக்கைகள் மூலம் மக்கள் உணர்வுகளை புண்படுத்துகிற நடவடிக்கைகளில் ஈடுபடும் சமூக விரோதிகளை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டும். சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கண்டறிந்து உடனடியாக குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்ட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
**எழில்**
�,