கர்நாடகா மாநிலத்தில் அரசு கல்லூரி நிறுவனங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிந்துவர கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது. இதை ஏற்காமல் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை கல்லூரி நிர்வாகம் கடந்த இரண்டு வாரங்களாக வகுப்பறைக்குள் அனுமதிக்கவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வகுப்பறைக்கு வெளியே, கல்லூரி வளாகத்திற்குள்ளே மாணவிகள் போராடி வந்தனர்.
ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கவில்லையெனில், நாங்கள் காவி சால்வை அணிந்து வகுப்பறைக்கு வருவோம் என ஆர்.எஸ்.எஸ். பாஜகவின் தூண்டுதலினால் மாணவர்கள் காவி சால்வை அணிந்து வந்தனர். இருதரப்பினர்களிடையே நடந்த போராட்டம் தொடர்ந்து பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த பிரச்சினை மாநிலத்தின் மற்ற மாவட்டங்களான பாகல்கோட்டை, பெலகாவி, கோலார், குடகு, சாம்ராஜ்நகர், மண்டியா, தாவணகெரே, சிக்கமகளூரு, ஹாசன், யாதகிரி, கலபுர்கி என பெரும்பான்மையான மாவட்டங்களில் எதிரொலித்தது.
இந்த நிலையில், நேற்று மாண்டியா நகரில் பிஈஎஸ் கல்லூரி நுழைவு வாயிலில் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த மாணவர்கள், அப்போது ஹிஜாப் அணிந்து தனியாக வந்த மாணவியை பார்த்து ஜெய் ஸ்ரீராம் என சத்தமாக மாணவர்கள் முழக்கமிட்டனர்.
தன்னைச் சுற்றி பெரிய கூட்டம் இருக்கிறது என்ற அச்சம் சிறிதும் இல்லாமல், அம்மாணவி துணிச்சலாக ‘அல்லா ஹூ அக்பர்’ என்று அவர்களை எதிர்த்து முழக்கமிட்டார்.
இதையடுத்து,கல்லூரி விரிவுரையாளர்கள் அந்த மாணவியை அழைத்து சென்றனர். தற்போது சமூகவலைதளத்தில் எங்கே பார்த்தாலும் இந்த வீடியோதான் அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது. ‘அல்லா ஹூ அக்பர்’ என்பது தற்போது அரசியல் முழக்கமாக மாறியது.
ஒருகட்டத்தில் போராட்டம் கலவரமாக மாற ஆரம்பித்தது. தாவணகெரே, ஷிவமொக்கா மாவட்டங்களில் போராட்டக்காரர்கள் பொதுவாகனங்கள் மற்றும் போலீசாரின் வாகனங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.
அமைதியை பேணிகாக்கவும், கலவரத்தை குறைக்கும் வகையில் பள்ளி, கல்லூரிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அறிவித்து அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டார்.
இந்த விவகாரம் கர்நாடகா மட்டுமில்லாமல், தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகையில், ஆங்காங்கே போராட்டங்களும் நடந்து வருகின்றன.
ஹிஜாப் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சென்னை அண்ணா சாலையில் தாராப்பூர் டவர் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தில் கர்நாடக பாஜக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
இந்த விவகாரம் நாளுக்கு நாள் பூதாகரமாகும் நிலையில், இதற்கான எதிர்ப்பும் விரிவடைந்து செல்கிறது.
பாஜக ஆளும் மாநிலத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம், மற்ற மாநிலங்களிலும் பரவிவிடுமோ என்ற அச்சம் பலருக்கும் வந்துள்ளது.
இதுகுறித்து மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில், ” கர்நாடகாவில் நடப்பது கலக்கத்தைத் தூண்டுகிறது. கள்ளமில்லா மாணவர்கள் மத்தியில் மதவாத விஷச் சுவர் எழுப்பப்படுகிறது. ஒற்றைச் சுவர் தாண்டியிருக்கும் பக்கத்து மாநிலத்தில் நடப்பது தமிழ்நாட்டுக்கும் வந்துவிடக் கூடாது. முற்போக்கு சக்திகள் மேலும் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது” என்று கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,” விரும்பிய மதத்தைத் தழுவதற்கும், அதுதொடர்பான வழிபாட்டு முறைகளை மேற்கொள்வதற்கும், அதுகுறித்தக் கருத்துப்பரவலைச் செய்வதற்குமான வாய்ப்பை இந்தியாவின் அரசியலமைப்புச் சாசனம் அடிப்படை உரிமையாக வரையறுத்து வழங்கியுள்ள நிலையில், அதற்கு நேர்மாறாக, இசுலாமியப் பெண்களின் உடைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதும், மதவாத அடையாளமானக் காவித்துண்டை அணிந்துக் கல்விக்கூடங்களுக்கு வருகைதருவதுமானப் போக்குகள் ஒருபோதும் ஏற்புடையதல்ல. ‘வெள்ளையர்களது ஆட்சிக்காலத்தில் அரசின் கொடுமைகளுக்கெதிராகப் போராடும் உரிமையையாவது கொடுத்தார்கள். விடுதலைபெற்ற நாட்டில் அந்த உரிமையும் பறிக்கப்பட்டுவிட்டது’ என்றார் தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள். அக்கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் மானுட உரிமைக்காகவும், மண்ணின் நலனுக்காகவும், மக்களின் நலவாழ்வுக்காகவுமாக அறவழியில் போராடும் மனித உரிமை ஆதரவாளர்களை, சனநாயகப்பற்றாளர்களை கடும் சட்டங்களின் கீழ் கைதுசெய்து, சிறையிலடைத்து கொடும் சித்திரவதை செய்கிறது பாசிச பாஜக அரசு.
நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் நம்பிக்கைத் தூண்களாக திகழும் இளைய தலைமுறைகளின் மனதில் மதவாத வன்மத்தை விதைத்து, அவர்களது எதிர்காலத்தையே அழிக்க நினைக்கும் மனிதகுல விரோதியான பாஜகவின் எதேச்சதிகாரச்செயல்பாடுகளையும், கொடும் வன்முறைச்செயல்களையும் தடுத்து நிறுத்தி, நாட்டின் ஒற்றுமையைக் காக்கவும், சமூகத்தின் நல்லிணக்கத்தை நிலைநாட்டவும் அணிதிரள வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பும், கடமையுமெனக்கூறி, அறைகூவல் விடுக்கிறேன்.
கர்நாடகாவில் மதவெறிக் கும்பலால் அரங்கேற்றப்படும் நாசகாரச்செயல்பாடுகளுக்கு இளைய தலைமுறைப்பிள்ளைகள் இரையாகாமல் காப்பாற்றக் களமிறங்கி, மதவாதத்திற்கு எதிராக மனிதம் காக்கவும், மக்களை நல்வழிப்படுத்தவுமாக சனநாயகப்பேராற்றல்களும், மானுடப்பற்றாளர்களும் ஒன்றிணைய வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். இத்தோடு, அண்டை மாநிலமான கர்நாடகாவில் நடைபெற்று வரும் மதவெறிச்செயல்கள் தமிழ்நாட்டிலும் தலைதூக்காது தடுக்க மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட்டு, இந்துத்துவக்கும்பலை இரும்புக்கரம் கொண்டு, சட்டத்தின் துணைநின்று ஒடுக்க வேண்டுமென தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
நோபல் பரிசு பெற்றவரும் பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் உரிமை போராளியுமான மலாலா யூசுப், “ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு செல்ல அனுமதிக்க மறுப்பது கொடுமையானது. இஸ்லாமிய பெண்களை புறந்தள்ளுவதை இந்திய தலைவர்கள் நிறுத்த வேண்டும். பெண்களின் ஆடை குறைந்தாலோ கூடினாலோ அது பிரச்சினையாகி விடுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, “ பிகினி, ஜீன்ஸ் அல்லது ஹிஜாப் எதுவாக இருந்தாலும், பெண் என்ன அணிய வேண்டும் என்பதை முடிவு செய்வது ஒரு பெண்ணின் உரிமை. இந்த உரிமை இந்திய அரசியலமைப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. பெண்களை துன்புறுத்துவதை நிறுத்துங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
நடிகையும், பாஜக பிரமுகருமான குஷ்பு ட்விட்டரில்,”கல்வி என்பது மதம் சார்ந்தது அல்ல, சமத்துவம் சார்ந்தது. பள்ளியில் சீருடை அணிவதையே நான் நம்புகிறேன். விதிகள் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் என்பது உங்கள் மதத்தைக் காட்டுவதற்காக அல்ல, ஒரு இந்தியராக உங்கள் பலத்தைக் காட்டுவதற்காகவே. இந்த விஷயத்தில் அரசியலில் ஈடுபடுவது அவமானம். நம் பள்ளி நாட்களில் எப்படி இருந்தோமோ, அதே போல் ஒன்றாக இருப்போம். என் பள்ளி நாட்களில் சீருடையைத் தவிர வேறு எதையும் அணிந்த குழந்தைகளை நான் பார்த்ததில்லை. என் குழந்தைகள் பள்ளியில் படிக்கும் போது கூட அப்படி இல்லை. அப்போது யாரும் குறை கூறவும் இல்லை. உங்கள் மதத்தை உங்கள் பேட்ஜாக பள்ளிக்கு அணிய வேண்டும் என்ற இந்த திடீர் தூண்டுதல் ஏன்? பள்ளிகளுக்கு விதிகள் இல்லையா?” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் ஹிஜாப் அணிந்துவர அனுமதி கோரி மாணவிகள் தொடர்ந்த வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இன்று அவ்வழக்கு குறித்தான விசாரணை நடைபெறவுள்ள நிலையில், நீதிமன்றம் என்ன சொல்லும் என்றஎதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
**-வினிதா**