நேர்மையான அதிகாரிகள் தங்களது கடமையைச் செய்யவே போராட வேண்டி இருப்பதாகச் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
திருச்சி கரியமாணிக்கம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் கேட்டு மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.
அதில் தாயனூர் கிராம உதவியாளர் பெரியசாமியை தாக்கியதாக என் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கிராம உதவியாளருக்கும் எனக்கும் ஏற்கனவே கோயில் திருவிழாவின்போது பிரச்சனை ஏற்பட்டது. அந்த முன்விரோதம் காரணமாக என் மீது அவர் அளித்த பொய் புகாரின் பேரில்போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் போலீசார் என்னைக் கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார் .
இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘கிராம உதவியாளரை தாக்கி உப்பின் மீது முழங்காலில் நிற்க வைத்ததாக மனுதாரர் மீது குற்றம்சட்டப்பட்டுள்ளது. மனுதாரர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்படவில்லை என்பதால் முன்ஜாமீன் கேட்டு வந்துள்ளார்.
போலீசார் சாதாரண மக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம். அரசு ஊழியர்கள் பலர் தங்களது வேலையை முறையாக செய்வதில்லை. மேலும் பலர் லஞ்சம் வாங்குகின்றனர். இந்த சூழலில் நேர்மையாக பணிபுரியும் அதிகாரிகளுக்கு முறையாக பாதுகாப்பு வழங்குவதும் அவசியம்.
நேர்மையான அதிகாரிகளுக்கு எதிரான செயல்களை தடுக்காவிட்டால் அவர்கள் எப்படி நேர்மையாக இருப்பார்கள். நேர்மையான அதிகாரிகள் தங்களது கடமையைச் செய்யவே போராட வேண்டியுள்ளது என்று கருத்து தெரிவித்து இவ்வழக்கை அக்டோபர் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
**-பிரியா**
�,