அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி புகார் அளித்திருந்தார். அதில், மணிகண்டன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி, ஐந்து ஆண்டுகள் குடும்பம் நடத்தினார் என்றும் மூன்று முறை கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்தார் என்றும் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து மணிகண்டன் மீது அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் ஆறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதனால் தலைமறைவான மணிகண்டனை பெங்களூருவில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். இதையடுத்து மணிகண்டன் ஜாமீன் கேட்டு சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றம் மற்றும் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதனால் அவர் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், தனக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாருக்கு எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை. அந்த நடிகைக்கு நான் கொடுத்த 5 லட்சம் ரூபாய் பணத்தை கேட்டபோது இந்தப் பிரச்சினை ஏற்பட்டது. மற்றபடி நான் நிரபராதி. எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும். இதற்காக நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்கத் தயாராக இருக்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே மணிகண்டனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி மறுத்த சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அடையாறு அனைத்து மகளிர் காவல் துறையினர் உயர் நீதிமன்றத்தில் மனு அளித்தனர்.
மணிகண்டன் நடிகையுடன் பேச பயன்படுத்திய மொபைல் மதுரையில் உள்ள அவரது வீட்டில் இருக்கிறது. அதை கண்டுபிடித்து விசாரிக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்திருந்தனர்.
இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன்பு இன்று (ஜூலை 2) விசாரணைக்கு வந்தது. அப்போது, சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிபதி, மணிகண்டனை 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
**-பிரியா**
�,