வேலூர் சம்பவம்: அரசுக்கு ஈபிஎஸ் வைக்கும் கோரிக்கை!

Published On:

| By Balaji

வேலூரில் வீடு இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த 9 பேரின் குடும்பங்களுக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. வேலூர் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக பேரணாம்பட்டு பகுதியில் அனிஷா பேகம் என்பவரது வீட்டில் நேற்றிரவு அக்கம்பக்கத்தினர் தங்கியிருந்தனர். திடீரென்று இன்று காலை அந்த வீடு இடிந்து விழுந்தது. இதில் அங்கு தங்கியிருந்த 4 குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இந்நிலையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில்,” வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு மசூதி தெருவில், வீடு இடிந்து விழுந்ததில் 4 குழந்தைகள், 5 பெண்கள் என 9 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன். அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் என்று அரசு நிவாரணத்தை உயர்த்தி வழங்குவதோடு குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share