ஒமிக்ரான்: விமானப் பயணிகளுக்கு சுகாதாரச் செயலாளர் எச்சரிக்கை!

politics

கொரோனா தொற்று உறுதியானலே அது ஒமிக்ரான் என்று அர்த்தமில்லை. மரபியல் ரீதியாக உறுதி செய்தால் மட்டுமே அது ஒமிக்ரான் தொற்று என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார்.

இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் அதிவேகத்தில் உலக நாடுகளில் பரவி வருகிறது. இதுவரை 38 நாடுகள் வரை பரவியுள்ளது. இந்தியாவில் கடந்த டிசம்பர் 2ஆம் தேதி கர்நாடகாவில் இருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று (டிசம்பர் 4) குஜராத் மாநிலத்தில் ஒருவருக்கும், நேற்று மாலை மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பையில் ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் கேப் டவுனில் இருந்து துபாய் மற்றும் டெல்லி வழியாக மும்பை வந்த 33 வயதானவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அம்மாநிலக் கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் பிரதீப் கூறுகையில், “ஒமிக்ரான் பாதிக்கப்பட்டவருக்கு லேசான காய்ச்சல் மட்டுமே உள்ளது. வேறு எந்தவித அறிகுறியும் இல்லை. அவருடன் சமீபத்தில் தொடர்பில் இருந்த அவருடைய பெற்றோர் உட்பட 35 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் பாதிப்பு இல்லை. அதுபோன்று பாதிக்கப்பட்ட நபருடன் டெல்லி மும்பை விமானத்தில் பயணித்த 25 பேருக்கும் பரிசோதனை செய்ததில், யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், அவருடன் தொடர்பில் இருந்த நபர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன” என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “தமிழ்நாட்டில் தற்போது வரை யாருக்கும் ஒமிக்ரான் பாதிப்பு இல்லை. கொரோனா தொற்று உறுதியானாலே அது ஒமிக்ரான் என்று அர்த்தம் இல்லை. மரபியல் ரீதியாக உறுதி செய்யப்பட்டால் மட்டுமே அது ஒமிக்ரான் பாதிப்பு.

விமானம் மூலம் வருவோருக்கு தொற்று உள்ளதா, இல்லையா என உறுதி செய்யும் வரை காத்திருப்பது அவசியம். தொற்று உறுதியானால் மருத்துவத் துறைக்கு ஒத்துழைத்து தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும். விமான நிலையங்களில் பரிசோதனை செய்யாமல் தப்பிச் செல்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். விமான நிலையங்களில் காத்திருப்பில் உள்ள பயணிகளுக்கு உணவுப் பொருட்களின் விலையைக் குறைக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மூன்று மாவட்டங்களில் தொற்று அதிகரித்துள்ளதாக ஒன்றிய அரசு கடிதம் எழுதியுள்ளது. அதனுடன் கோவை, சேலம், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களையும் கண்காணித்து வருகிறோம்.

தமிழ்நாடு முழுவதும் இன்று (நேற்று) நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் சுமார் 20 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். சென்னையில் மட்டும் சுமார் 1.70 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளனர். பொது சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி ஒமிக்ரான் தொற்றிலிருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

**-வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.