எவ்வளவு நாள் முகக்கவசம் அணிய வேண்டும்?: செயலாளர் பதில்!

Published On:

| By Balaji

பிப்ரவரி 2022 மாதம் வரை மட்டுமாவது நாம் முகக்கவசம் அணிவது போன்ற பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி மற்றும் தூய்மை இந்தியா திட்டத்தின் சார்பில் சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர் பெண்களுக்கு புற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வு முகாமை இன்று(அக்டோபர் 21) சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். அப்போது அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “தமிழ்நாட்டில் 5.4 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சீனாவுக்கு அடுத்தப்படியாக 100 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை படைத்துள்ளது. இதற்கு ஒவ்வொரு மாநிலங்களும் சிறந்த பங்களிப்பை அளித்துள்ளன. அதுபோன்று தமிழ்நாடும் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் இந்தியாவின் இந்த சாதனைக்கு பங்காற்றியுள்ளது. தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட 5.4 கோடி பேரில் 3.91 கோடி பேர் முதல் டோஸையும், 1.48 கோடி பேர் இரண்டாம் டோஸையும் செலுத்திக் கொண்டுள்ளனர். மெகா தடுப்பூசி மூலம் தமிழ்நாட்டில் அதிகமானோர் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர். இதற்காக முதல்வர், தலைமைச் செயலாளர் , சுகாதாரத் துறை அமைச்சர் ஆகியோர் பல இடங்களில் ஆய்வு மேற்கொண்டு இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தினர்.

இருப்பினும், தடுப்பூசி செலுத்துவதில் சில சிக்கல் இருக்கின்றன. குறிப்பாக, இரண்டாம் தவணை செலுத்த வேண்டிய 57 லட்சம் பேர் இன்னும் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளவில்லை. இவர்களுக்காக தினந்தோறும் நடைபெறும் தடுப்பூசி முகாமை அதிகபடுத்துவதுடன், இந்தவாரம் சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் அமைத்து, அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். அதுபோன்று 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், முதலில் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். தற்போது அவர்களும் தயக்கம் காட்டி வருகின்றனர். அவர்களில் 47 லட்சம் பேர் முதல் தவணையையும், 21.65 லட்சம் பேர் மட்டுமே இரண்டாம் தவணையையும் செலுத்தியுள்ளனர். அதனால், மக்களே தாமாக முன்வந்து தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர்,” செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள ஒரு அபார்ட்மெண்டில் 20 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 15 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனால், மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும், முகக்கவசம் அணிதல், அடிக்கடி கைகளை கழுவுதல் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். ரஷ்யா, பிரிட்டன் போன்ற நாடுகளில் இன்னும் தொற்று ஏறுமுகத்தில்தான் இருக்கிறது.

ஒன்றிய அரசு அனுமதி அளித்தவுடன் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும். எப்படி, கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு தடுப்பூசி போடுவதில் முதல் இடம் பிடித்தோமோ, அதுபோன்று இதற்கு ஒப்புதல் கிடைத்தவுடன், விரைவாக தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கொரோனா மூன்றாவது அலை எப்போது வரும் என்பது குறித்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் வரவில்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஏனெனில் மூன்றாவது அலை எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம். அதனால், அரசு வழங்கியுள்ள கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகளை மக்கள் மிகவும் கவனமாக கையாள வேண்டும். தொற்று குறைந்தவுடன் முகக்கவசம் அணிவதை மக்கள் தவிர்த்துவிடுகின்றனர். அது தவறு.

கோவையில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. இருப்பினும் 18 மாவட்டங்களில் பரவல் விகிதம் ஒரு விழுக்காடு மற்றும் அதற்கு மேல் உள்ளது. 20 மாவட்டங்களில் ஒரு விழுக்காடுக்கு கீழே உள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரையிலாவது அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்” என்று கூறினார்.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share