மத்திய அரசின் தாமதத்தால் தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி முடங்கும் அபாயம் உள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மத்திய அரசின் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இன்று(மே 31) பிற்பகல் ஆலோசனை நடத்தினார்
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “ இதுவரை தமிழகத்துக்கு 96 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. இதுவரை 87 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன. தற்போது தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கான தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளன. கையிருப்பில் உள்ள 4.93
லட்சம் தடுப்பூசிகளில் 2.69 லட்சம் தடுப்பூசி 18-44 வயதுள்ளவர்களுக்கும், 2.24 லட்சம் தடுப்பூசிகள் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு மே மாதத்துக்கு சுமார் 20 லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதில், 18.26 லட்சம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், பாக்கி சுமார் 1.74 லட்சம் தமிழகத்திற்கு வர வேண்டியுள்ளது. ஓரிரு நாட்களில் வழங்குவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஜூன் மாதத்திற்கு தமிழகத்திற்கு சுமார் 42.58 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்படும் என்றும், அதன் முதல் தவணை ஜூன் 6ஆம் தேதியும், அடுத்த கட்டமாக ஜூன் 9ஆம் தேதியும் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தடுப்பூசிகளை விரைவில் வழங்குமாறு கேட்டபோது, தமிழகத்திற்கு கடந்த மாதத்தை விட 2 மடங்கிற்கு மேல் தடுப்பூசி டோஸ் ஒதுக்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதனால், தற்போது கையிருப்பில் உள்ள தடுப்பூசிகளை ஆட்சியர்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேற்று மூன்று லட்சம் பேர் வரைக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த வேகத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டால் தற்போது கையிருப்பில் உள்ள தடுப்பூசி 2 நாட்களில் தீர்ந்துவிடும். அதனால், ஜூன் 3 முதல் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட வாய்ப்பு உள்ளது. இருப்பினும், மே மாதத்திற்கான தடுப்பூசிகளை 2 நாட்களுக்குள் மத்திய அரசு வழங்கினால் மட்டுமே தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெறும்.
உலகளாவிய டெண்டர் மூலம் 3.5 கோடி தடுப்பூசி ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசிக்கான உலகளாவிய டெண்டரில் பங்கேற்றுள்ள நிறுவனங்கள் குறித்து ஜூன் 5ஆம் தேதிதான் தெரியும்” என தெரிவித்துள்ளார்.
**வினிதா**
�,