oகொரோனா பரவல் குறைகிறது: சுகாதார செயலாளர்!

Published On:

| By Balaji

பொதுநிகழ்ச்சிகளில் மக்கள் பங்கேற்பதை குறைத்து கொண்டால், கொரோனா பரவல் குறைவதற்கு வாய்ப்புள்ளது என சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. பரவலுக்கேற்ப இன்னும் கட்டுப்பாடுகளை அதிகரிக்க அதிகாரிகள் திட்டமிட்டு கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், இன்று(ஏப்ரல் 27) சென்னை தண்டையார்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்,” இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளால் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா பரவல் வேகம் சற்று குறைந்துள்ளது. இன்னும் கடுமையாக உத்தரவுகளை பின்பற்றினால் பாதிப்பு குறையும். அடுத்த சில நாட்களுக்கு மக்கள் தேவையின்றி வெளியே வரக்கூடாது. அதுமட்டுமில்லாமல், பொதுநிகழ்ச்சிகளில் பங்கு கொள்வதை மக்கள் குறைத்து கொண்டால் பரவல் முழுமையாக குறைய வாய்ப்புள்ளது. கொரோனா பரவல் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் குறைவாக இருக்கிறது என மக்கள் அலட்சியமாக நினைத்துக் கொண்டு வெளியே சுற்ற வேண்டாம். வீட்டில் கொரோனா தொற்று உள்ளவர்கள் இருந்தால், மற்றவர்கள் முகக்கவசம் அணிந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஆரம்பத்தில், நாளொன்றுக்கு மூவாயிரம் பேர் மட்டுமே தடுப்பூசி போட்டனர். பிறகு படிப்படியாக தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை அதிகமானது. நேற்று முன்தினம் 10, 000 பேர் மட்டுமே தடுப்பூசி எடுத்துக் கொண்ட நிலையில், நேற்று ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மாநிலத்தில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல், தடுப்பூசி வீணாவதை 5% ஆக குறைத்துள்ளோம். இதை மே 1ஆம் தேதிக்கு மேல் பூஜ்ஜியமாக குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மக்கள் தங்களை முழுமையாக அர்ப்பணித்து அரசின் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இந்த வாரக் கடைசிக்குள் 12,000 படுக்கை வசதிகள் கூடுதலாக உருவாக்கப்படும். ரெம்டெசிவர் மருந்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதற்கான சிறப்பு மையங்கள் விரிவுப்படுத்தப்படும்.

தமிழகத்தில் நாள்தோறும் ஒரு லட்சம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. எந்தவொரு பாதிப்பு உறுதியானாலும் முதலில் அந்த நோயாளிகளை சிடிஎஸ், திருவொற்றியூர், ஈஎஸ்ஐ, மாதவரம் மருத்துவமனை, என்எஸ்ஐடி கிண்டி உள்ளிட்ட இடங்களில் பரிசோதனை மையத்துக்கு அழைத்துச் சென்று, எக்ஸ்ரே, ரத்த மாதிரி பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அங்கு வைரஸ் பாதிப்பின் அளவு தரம் பிரிக்கப்பட்டு அதிக பாதிப்புள்ளவர்கள் கண்டறியப்பட்ட பிறகு அவர்களை அரசு மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் சமீபத்திய வழிகாட்டுதல்களின்படி பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. அதனால், கொரோனா அறிகுறி உள்ளவர்கள் பரிசோதனை மையங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆக்சிஜன் உற்பத்தியைக் கண்காணிக்கக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் தொடர்ந்து முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி கொரோனா சங்கிலியை உடைக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

**வினிதா**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share