தமிழகத்தில் எம்.ஜி.ஆர் பல்கலையில் டெல்டா ப்ளஸ் வைரஸை கண்டறிவதற்கான ஆய்வகம் அமைக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை அதிகளவிலான இறப்புகளை ஏற்படுத்தியது. மொத்தம் 32,388 பேர் இதுவரை கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இரண்டாம் அலையின் தாக்கம் குறைந்து வரும், அதே வேளையில் கொரோனா 2ஆவது அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும், மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் 80 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
அதுபோன்று தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் டெல்டா ப்ளஸ் வைரஸ் பரவியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. டெல்டா ப்ளஸ் 3ஆம் அலையாக இருக்கலாம் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் டெல்டா ப்ளஸ் வைரசை எதிர்கொள்ள அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. குழந்தைகளுக்காக மருத்துவமனைகளில் தனி சிகிச்சை பிரிவு ஏற்படுத்துவது, இரண்டாம் அலைக்காக ஏற்படுத்தப்பட்ட 80 ஆயிரத்துக்கும் அதிகமான ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளை அப்படியே பராமரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதுபோன்று டெல்டா ப்ளஸ் வைரசைக் கண்டறியும் கருவிகளைத் தமிழகத்துக்குக் கொண்டு வந்து ஆய்வகம் அமைக்கத் தமிழக அரசு திட்டமிட்டது. சென்னை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வகம் அமைக்கலாம் என்று திட்டமிட்டு வந்த நிலையில், சென்னை எம்.ஜி.ஆர் பல்கலையில் அமைக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
கிண்டியில் இன்று (ஜூன் 29) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில், ஜிகா, போன்ற பல்வேறு வைரஸ்களை ஆராய்வதற்கான தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகம் இருக்கிறது.
இந்த ஆய்வகத்தை துறைச் செயலாளர் மற்றும் துணை வேந்தர் உடன் சென்று பார்த்தேன். ஏற்கனவே இங்கு ஆர்டிபிசிஆர் ஆய்வகமும் இயங்கிக் கொண்டிருக்கிறது. இங்கு டெல்டா பிளஸ் வைரஸை கண்டறியும் ஆய்வகத்தை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மிக விரைவில் இந்த ஆய்வகம் பயன்பாட்டுக்கு வரும்”என்று தெரிவித்தார். தமிழகத்தில் டெல்டா ப்ளஸ் வைரஸ் கண்டறிவதற்கான ஆய்வகம் அமைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
**-பிரியா**
�,