‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன்

Published On:

| By Balaji

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்ற கார் விபத்தில் சிக்கியதால் மதுரை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

கடந்த அதிமுக ஆட்சியில் சுகாதாரத் துறைச் செயலாளராக பொறுப்பேற்றார் ராதாகிருஷ்ணன். 2020 மே, ஜூன் ஆகிய மாதங்களில் கொரோனா தொற்று உச்சத்திலிருந்த நிலையில், அதனைக் கட்டுப்படுத்தியதில் சுகாதாரத் துறை செயலாளருக்கு முக்கிய பங்கு உண்டு.

இதையடுத்து ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் மாநகராட்சி ஆணையர், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் மாற்றப்பட்ட போதும் சுகாதாரத் துறை செயலாளர் மாற்றப்படாமல் அதே பணியில் நீடித்து வருகிறார்.

தமிழகத்தில் பல்வேறு அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்தபோதும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனை பணியிட மாற்றம் செய்யாதது திருப்தி அளிக்கிறது என்று சென்னை உயர் நீதிமன்றமும் பாராட்டு தெரிவித்து இருந்தது.

அந்தவகையில் கொரோனா தடுப்பு பணிகளில் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஈடுபட்டுவந்தார்.

தற்போது ஓமிக்ரான் தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இன்று காலை மதுரை விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து விமான நிலையத்திலிருந்து கார் மூலம் திருச்சி விமானநிலையத்திற்குப் புறப்பட்டார் ராதாகிருஷ்ணன். அப்போது விமான நிலைய வளாகத்திலேயே தடுப்புச் சுவரில் மோதி ராதாகிருஷ்ணன் புறப்பட்ட கார் விபத்தில் சிக்கியது. இதில் காரின் வலதுபுற முன் பக்கம் சேதமடைந்தது. இவ்விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

பின்னர் காரில் இருந்து இறங்கிய ராதாகிருஷ்ணன், ஓட்டுநரிடம் ‘கவலைபடாதீங்க அண்ணா’ என்று ஆறுதல் கூறி, அங்கிருந்த காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்துவிட்டு, மற்றொரு கார் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு புறப்பட்டுச் சென்றார்.

**-பிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share