[ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம்!

Published On:

| By Balaji

மழை வெள்ளத்தால் சேதமடைந்த குறுவை – கார்- சொர்ணவாரிப் பயிர்களுக்கு, ஹெக்டேருக்கு ரூ.20,000 நிவாரணமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழையினால் பல்வேறு பகுதிகளில் சாலைகள், குடிநீர் வடிகால்கள் சேதமடைந்துள்ளன. அதுமட்டுமில்லாமல், அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் அனைத்தும் மழை வெள்ளத்தில் மூழ்கி அழுகிவிட்டன. குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரியில் அதிகளவிலான விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளன.

மழை வெள்ளத்தினால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்ட மாவட்டங்களான திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மயிலாடுதுறை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு நேரடியாக சென்ற முதல்வர் நீரில் மூழ்கிய பயிர்களை பார்வையிட்டு பயிர் பாதிப்பு குறித்து விவசாயிகளிடம் கருத்துகளை கேட்டறிந்தார்.

மேலும் டெல்டா மாவட்டங்களில் சேதமடைந்த பயிர் விவரங்களை அறிய கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் அமைச்சர்கள் குழு ஒன்றையும் அமைத்தார்.

பாதிப்படைந்த மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்கள் குழு, அதன் அறிக்கையை இன்று(நவம்பர் 16) முதல்வரிடம் சமர்பித்தது.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில்,” அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை-கார்-சொர்ணவாரி பயிர்கள், முழுமையாக சேதமடைந்த இனங்களில் விவசாயிகளுக்கு இழப்பீடாக, ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படும்.

நடப்பு சம்பா பருவத்தில் நடவு செய்து, நீரில் மூழ்கி சேதமடைந்த பயிர்களை மறு சாகுபடி செய்திட ஏதுவாக, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.6,038 மதிப்பீட்டில் இடுபொருட்கள் வழங்கப்படும்.

மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த சாலைகள் வடிகால்கள் மற்றும் இதர உள்கட்டமைப்பு வசதிகளை சரி செய்ய ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share