தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்ற அண்ணாமலை தனது பதவிக் காலத்தின் கீழ் புதிய நிர்வாகிகளை நியமிக்கத் திட்டமிட்டு அதற்கான ஆலோசனைகளை நடத்தி வருகிறார்.
அதோடு அண்ணாமலை தன் கைப்பட எழுதிய ஒரு கடிதத்தை பாஜகவின் தமிழ்நாடு ஊடகப் பிரிவுத் தலைவர் ஏ. என்.எஸ். பிரசாத் இன்று (ஜூலை 22)வெளியிட்டுள்ளார்.
அதில், “ பூங்கொத்து, மலர் மாலை, மலர் கிரீடம் போன்றவற்றை என்னை சந்திக்க வரும்போது அன்போடு தவிர்க்க வேண்டுகிறேன். நமது கட்சியின் பத்திரிகையான ஒரே நாடு மாதமிருமுறை இதழுக்கு ஆண்டு சந்தா, 3 ஆண்டு சந்தா செலுத்துவது எனக்கு சால்வை, மலர் மாலை அணிவிப்பதை விட பெரும் மகிழ்வு தரும். இதையே நாம் பெரிதும் விரும்புகிறேன். நமது கட்சி இதழை ஆதரிப்பதன் மூலம் நமது சித்தாந்தம் நமது சாதனைகளை மக்களுக்குக் கொண்டு செல்வோம். உங்கள் ஒத்துழைப்பை நல்க வேண்டுகிறேன்” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் அண்ணாமலை.
திராவிட அரசியல் கட்சிகளில்தான் இதுவரை தலைவர்கள் தங்களுக்கு அளிக்கப்படும் சால்வைகளுக்கு பதிலாக புத்தகங்களையும், கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகைக்கு சந்தாவையும் வசூலித்து வந்தார்கள்.
பாஜகவின் தலைவராக வந்திருக்கும் அண்ணாமலை தமிழகத்தில் திமுக, அதிமுக, மதிமுக போன்ற திராவிடக் கட்சிகள் ஒவ்வொன்றும் தங்களது முரசொலி, நமது எம்.ஜிஆர். நமது அம்மா, சங்கொலி என பெயர் சொல்லும் விதமாக பத்திரிகைகளை கட்டமைத்து வைத்திருப்பதைப் போல பாஜகவுக்கும் ஒரே நாடு என்ற பத்திரிகை கட்டமைக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார். அதை ஒட்டியே தனக்கு மலர் மாலைகளுக்கு பதிலாக ஒரே நாடு சந்தா செலுத்துங்கள் என்று கோரிக்கை வைத்திருக்கிறார். அதையும் தன் கைப்பட எழுதி வெளியிட்டுள்ளார்.
திராவிடக் கட்சிகளின் பாணியைப் பின்பற்றும் அண்ணாமலையின் இந்த உத்தி பாஜகவினரிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
**-வேந்தன்**
�,