ஹத்ராஸ் குடும்பம்: கட்டியணைத்து ஆறுதல் தெரிவித்த பிரியங்கா

Published On:

| By Balaji

உபியில் பாதிக்கப்பட்ட ஹத்ராஸ் பெண்ணின் தாயைச் சந்தித்த கிழக்கு உபி காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கட்டியணைத்து ஆறுதல் தெரிவித்தார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் ஹத்ராஸ் குடும்பத்துக்கு 10 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்து ஆறுதல் கூறினர்.

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் 19 வயது பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது, அவரது உடல் குடும்பத்தினரிடம் காண்பிக்காமல் போலீசாரே எரித்தது, மீடியாக்களுக்கு அனுமதி மறுப்பு, எதிர்க்கட்சி தலைவர்களை போலீசார் கீழே தள்ளியது, இந்தியா டுடே பத்திரிகையாளர் செல்போன் உரையாடல் ஒட்டுகேட்பு என அடுத்தடுத்து நடைபெற்ற சம்பவங்கள் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசுக்கும், உபி போலீசாருக்கும், ஹத்ராஸ் மாவட்ட நிர்வாகத்துக்கும் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட தலித் பெண் உடல் எரிக்கப்பட்டது, பெண்ணின் உறவினர்கள் உடலை எரிக்கக் கூடாது, தங்களிடம் தரவேண்டும் என்று கூறி காவல் துறையினரிடம் கெஞ்சியது உள்ளிட்ட அனைத்து விவரங்களும், இந்தியா டுடேவின் பத்திரிகையாளரான தனுஸ்ரீ பாண்டேவின் தொடர் முயற்சிகளால் வெளிச்சத்துக்கு வந்தது.

**ஒட்டுக்கேட்கப்பட்ட பத்திரிகையாளரின் செல்போன் உரையாடல்**

இந்த சூழலில் தனுஸ்ரீ பாண்டே மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் சந்தீப் ஆகிய இருவரது செல்போன் உரையாடல் வலதுசாரி இயக்கத்துக்கு ஆதரவான வலைதளம் ஒன்றில் வெளியானது. அந்த ஆடியோவில் தனுஸ்ரீ, ‘போலீஸ் விசாரணையில் திருப்தி அடைகிறோம்’ என உத்தரப் பிரதேச அரசு அழுத்தம் கொடுக்கிறது என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையைப் பேச வைத்து வீடியோ அனுப்புமாறு சந்தீப்பிடம் கேட்கிறார்.

உபி காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றில், ”போலீஸ் விசாரணையில் திருப்தியில்லை” என்று பெண்ணின் தந்தை கூறுகிறார். மேலும், உச்ச நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் சிபிஐ விசாரணை வேண்டும். அதிகாரிகளால் அழுத்தம் தரப்படுகிறது. ஊடகங்களைச் சந்திக்க எங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது” என்று கூறுகிறார்.

இந்த வீடியோவை மேற்கோள் காட்டி, சந்தீப்பிடம், தனுஸ்ரீ கேட்டதாகவும், அதற்கு சந்தீப் ஒப்புக்கொள்வது போன்றும் அந்த உரையாடல் நீள்கிறது. இந்த ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தனுஸ்ரீ, சந்தீப்புக்கு அழுத்தம் கொடுத்து அரசுக்கு எதிராகப் பேசவைக்க முயன்றுள்ளார் என்று பாஜக வட்டாரங்கள் குற்றம்சாட்டுகின்றன.

இந்த சூழலில் இந்தியா டுடே, தனது பத்திரிகையாளரின்செல்போன் உரையாடல் பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது குறித்து உபி அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்தியா டுடே வெளியிட்ட அறிக்கையில், ஹத்ராஸ் விவகாரம் தொடர்பான எங்கள் பத்திரிகையாளரின் உரையாடல் வெளியானது எப்படி? எங்களது பத்திரிகையாளருடையதோ அல்லது பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் சந்தீப் செல்போன் உரையாடலோ எந்த சட்டவிதிகளின் கீழ் கசிய விடப்பட்டன. எதற்குப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் செல்போன்கள் கண்காணிப்பில் உள்ளன? என்று கேள்வி எழுப்பியுள்ளது. அதோடு பத்திரிகையாளர்களை ஊருக்கு உள்ளேயே செல்ல அனுமதிக்காத நிலையில் பெண்ணின் சகோதரரிடம் அங்கு நடப்பதை வீடியோ எடுத்து அனுப்ப எங்கள் செய்தியாளர் கேட்டதில், எந்த தவறும் கிடையாது. இந்தியா டுடே தனது பத்திரிகையாளருக்கு ஆதரவாக நிற்கும் என்றும் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பாஜக ஐடி விங்க்கைச் சேர்ந்த அமித் மால்வியா, அந்த தொலைக்காட்சி சேனலில் நடந்த விவாத நிகழ்ச்சியில் பேசுகையில், “இந்தியா டுடேவின் தவறான செய்தியால் தான் ஹத்ராஸுக்கு செல்ல ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக” தெரிவித்துள்ளார்.

மேலும், பாதிப்பட்ட பெண்ணின் சகோதரருக்கு என்ன பேச வேண்டும், என்ன பேசக் கூடாது என்று தனுஸ்ரீ பாண்டே சொல்லித் தருகிறார். நீங்கள் செய்தி சேகரிக்கவில்லை. செய்திகளை நீங்கள் உருவாக்குகிறீர்கள் என்று தெரிவித்தார். அதோடு எந்த சட்டத்தின் கீழ் உபி அரசு, இந்த ஆடியோவை ரெக்கார்டு செய்தது, எந்த சட்டத்தின் கீழ் பத்திரிகையாளர் செல்போன் உரையாடல் ரெக்கார்டு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களின் செல்போன்கள் ஏன் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன. அவர்கள் பாதிக்கப்பட்டவர்களா அல்லது குற்றவாளிகளா என்று அடுக்கடுக்காக இந்தியா டுடே நெறியாளர் ராகுல் எழுப்பிய கேள்விக்கு மால்வியா உரியப் பதில் அளிக்கவில்லை.

அதோடு, அந்த பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படவில்லை என்று பிரேதப் பரிசோதனை அறிக்கை குறிப்பிடுவதாகக் கூறி மால்வியா இவ்விவகாரத்தில் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

இந்த சூழலில், இரவோடு இரவாகப் பெண்ணின் உடலை போலீசார் தகனம் செய்த விவகாரத்தை வெளி கொண்டு வந்த இந்தியா டுடே பத்திரிகையாளரை இழிவு படுத்தும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளதாகப் பத்திரிகையாளர்கள் ட்விட்டரில் குறிப்பிட்டு வருகின்றனர்.

**ராகுல், பிரியங்கா விசிட்**

இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் நேற்று மாலை, பல்வேறு எதிர்ப்புக்கு மத்தியில் பாதிக்கப்பட்ட ஹத்ராஸ் குடும்பத்தினரைச் சந்தித்தனர். சுமார் 35நிமிடம் அவர்களது குடும்பத்தினரிடம் நடந்த விவரத்தை கேட்டறிந்து ஆறுதல் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயை கட்டியணைத்து ஆறுதல் தெரிவித்துள்ளார் பிரியங்கா. நீதி கிடைக்கும் வரை காங்கிரஸ் உங்களுக்கு ஆதரவாக இருக்கும் என்று பிரியங்காவும், ராகுலும் குடும்பத்தினருக்கு உறுதி அளித்துள்ளனர். அப்போது, உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணைக் குழு அமைக்கப் பெண்ணின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பிரியங்கா காந்தி, “ஹத்ராஸ் மாவட்ட ஆட்சியர் பர்வீன் லக்சர் இடை நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் இனி எந்த ஒரு உயர் பதவிகளுக்கும் அவரை நியமிக்கக் கூடாது என்றும் குடும்பத்தினர் தெரிவித்தனர். எங்களிடம் கேட்காமல் உடலை எரித்தது ஏன்? ஏன் எங்களை மிரட்டுகிறார்கள். எரிக்கப்பட்டது எங்களது பெண் தான் என்று எப்படித் தெரிந்துகொள்வது என்று குடும்பத்தினர் கேள்வி எழுப்புகின்றனர். இந்த கேள்விகளுக்கு உபி அரசு பதில் அளித்தே ஆக வேண்டும் என்று பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு ஆதரவாக இருப்போம் என்று உறுதி அளித்துள்ளோம். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும். இந்த நாடே ஒன்றுபட்டிருப்பதால் உத்தரப் பிரதேச அரசே நினைத்தாலும் தன்னிச்சையாகச் செயல்பட முடியாது என்று தெரிவித்துள்ளார்,

தலித் பெண்ணின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆட்சியர் பர்வீன் லக்சர், இன்று அல்லது நாளை வரைதான் மீடியாவோ, மற்றவர்களோ உங்களுடன் இருப்பார்கள். அதற்குப் பிறகு நாங்கள் தான் உங்களுடன் இருப்போம். உங்களுடைய வாக்குமூலத்தை மாற்றுகிறீர்களா? இல்லையா என்பதை பொறுத்துத்தான் எங்களது நிலையும் இருக்கும் என்று மிரட்டும் தொனியில் பேசியதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.

இப்படி ஹத்ராஸ் பெண் வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை என்ன என்ற கேள்விகளுக்குப் பதில் இல்லாமல், அடுக்கடுக்காக பல பிரச்சினைகளும், திருப்பங்களும் ஏற்பட்டு வருகின்றது. மக்களின் குரலுக்கும், ஊடகங்களின் கேள்விக்கும் உபி அரசு செவி சாய்க்குமா?

**-கவிபிரியா**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share