இந்திய தேர்தல் ஆணையத்தின் அடுத்த தலைமை தேர்தல் ஆணையராக ஆக இருந்த அசோக் லவாசாவை, ஆசிய வளர்ச்சி வங்கியின் துணைத் தலைவராக நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நியமனம் தேசிய அரசியலில் மிக கவனமாக பார்க்கப்படுகிறது.
இந்திய தலைமை தேர்தல் ஆணையராக இருக்கும் சுனில் அரோராவுக்கு அடுத்து அப்பதவிக்கு வர இருப்பவர் அசோக் லவாசா. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அசோக் லவாசாவின் பெயர் பரபரப்பாக உச்சரிக்கப்பட்டது. காரணம் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பேசிய பேச்சுகள் தேர்தல் நடத்தை விதிகளை மீறியவை என்று புகார்கள் வந்தபோது, அந்தப் புகார்களை மற்ற இரு ஆணையர்கள் ஏற்க மறுத்து அவர்களுக்கு நற்சான்றிதழ் கொடுத்தனர். அதேநேரம் லவாசா ஆய்வு செய்து மோடி, அமித் ஷாவின் பேச்சுகளுக்கு நற்சான்றிதழ் அளிக்க மறுத்துவிட்டார். இதனால் பரபரப்பாக பேசப்பட்டார் லவாசா.
லவாசாவுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தில் இன்னும் இரண்டு வருடங்கள் பதவிக் காலம் இருக்கும் நிலையில், அக்டோபர் 2022 இல் அவர் தலைமைத் தேர்தல் ஆணையராக ஓய்வு பெற வேண்டும். அப்படி அவர் தலைமை தேர்தல் ஆணையராக இருந்தால் அவரது தலைமையின் கீழ்தான், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறும்.
இந்த நிலையில்தான் மத்திய அரசின் ஒப்புதலோடு அசோக் லவாசா ஆசிய வளர்ச்சி வங்கியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. இது தொடர்பாக ஊடகங்களிடம் பேச லவாசா மறுத்துவிட்டார். ஆனாலும் செப்டம்பர் மாதம் அவர் ஆசிய வளர்ச்சி வங்கியின் துணைத் தலைவராக பதவியேற்பார் என்று தெரிகிறது.
லாவாசாவின் நியமனம் குறித்து ஆசிய வளர்ச்சி வங்கியின் செய்திக்குறிப்பில், லவாசா மாநில மற்றும் கூட்டாட்சி மட்டங்களில் பொது – தனியார் கூட்டாண்மை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றில் விரிவான அனுபவம் கொண்டவர், பொதுக் கொள்கை மற்றும் தனியார் துறையின் பங்கு குறித்து ஆழ்ந்த அறிவைக் கொண்டுள்ளார் என்று பாராட்டியிருக்கிறது.
தேர்தல் ஆணையத்தின் வரலாற்றில் பதவிக் காலம் முடியும் முன்பே ஆணையர் ஒருவர் பதவியில் இருந்து வெளியேறுவது 1973க்குப் பிறகு இதுதான் முதல் முறை. 1973 ஆம் ஆண்டில், தலைமைத் தேர்தல் ஆணையர் நாகேந்தர் சிங், சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டதால் தனது பதவிக் காலத்தை நிறைவு செய்வதற்கு முன்பு ராஜினாமா செய்தார். அடுத்து இப்போது அசோக் லவாசாதான்.
“லவாசா தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்தால் வரக் கூடிய தேர்தல்கள் மிகக் கடுமையான கட்டுப்பாடுகளோடு எவ்வித செல்வாக்குக்கும் அடிபணியாமல் நடக்கும் என்று நம்பியிருந்தோம். தலைமை தேர்தல் ஆணையர் பதவிக்கு அவர் வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டிருக்கிறாரா என்ற விமர்சனங்கள் எழுந்தாலும், லவாசாவின் ஒப்புதல் இல்லாமல் இந்த நியமனம் நடைபெற்றிருக்குமா என்று தெரியவில்லை” என்கிறார்கள் டெல்லி பத்திரிகையாளர்கள்.
**-வேந்தன்**
�,”