^வெற்றிவேல் வீரவேல் Vs ஜெய் பெரியார்

Published On:

| By Balaji

கறுப்பர் கூட்டம் என்ற யு ட்யூப் சேனலில் முருகப் பெருமானை இழித்தும் பழித்தும் பேசி, கந்த சஷ்டி கவசம் பற்றி ஆபாசமாக சித்திரித்ததாகவும் சர்ச்சை எழுந்தது. அந்த சேனல் தொடர்புடைய சுரேந்திரன் சரண் அடைய இன்னும் சிலரை கைது செய்திருக்கிறது போலீஸ்.

இந்நிலையில் இதில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சமூக தளங்களில் ஹேஷ் டேக் போராட்டம் இன்று (ஜூலை 19) நடைபெறுகிறது.

இதற்காக #வெற்றிவேல் வீரவேல் என்ற பெயரில் ஹேஷ்டேக்கை சமூக தளங்களில் ஓரிரு தினங்கள் முன்பு உருவாக்கினார்கள் பாஜகவினர். ஜூலை 16 ஆம் தேதி இந்த விவகாரத்தில் பாஜக போராட்டம் நடத்திய நிலையில் ட்விட்டரில் அடுத்த ஆர்பாட்டத்தை துவக்கினார்கள். இதுகுறித்து பாஜகவின் மாநிலத் தலைவர் எல். முருகன், “வெற்றி வேல் வீர வேல் சுற்றி வந்த பகைவர் தம்மை தோள் நடுங்க வைத்த எங்கள் சக்தி வேல் ஞான சக்தி வேல்! ஆதி சக்தி அன்னை தந்த ஞான வேல் அசுரர் தம்மை அஞ்ச வைத்த வீர வேல் மூவர் தேவர் வாழ்த்த வந்த வெற்றி வேல் தெய்வ பக்தி உள்ளவர்க்கு கை கொடுக்கும் வீர வேல்… #வெற்றிவேல்_வீரவேல்” என்று பதிவிட்டுள்ளார்.

இன்று ட்விட்டரில் வெற்றிவேல் டிரண்டிங் ஆகியுள்ளது. இன்று மாலை வரை ஒரு லட்சத்து 39 ஆயிரம் பேர் வெற்றிவேல் வீரவேல் ஹேஷ்டாக்கில் ட்விட் செய்துள்ளனர்.

இதற்கு எதிராக இன்னொரு பக்கம் பகுத்தறிவாளர்கள் ஜெய் பெரியார் என்ற பெயரில் புதிய ஹேஷ்டேக்கை உருவாக்கி அதை டிரண்டிங் ஆக்கியுள்ளனர். ஜெய் பெரியார் தமிழ்நாடு என்ற பெயரிலான இந்த ஹேஷ் டேக்கை இட்டு அதில் பெரியார் தமிழகத்துக்கு என்ன செய்தார் என்று விளக்கி வருகிறார்கள்.

‘இந்தியாவின் கிரிக்கெட் டீமில் இருக்கும் அனைத்து விளையாட்டு வீரர்களும் சாதிப் பின்னொட்டோடுதான் அடையாளம் காணப்படுகிறார்கள். ஆனால் தமிழகத்தில் 234 எம்.எல்.ஏ.க்கள் ஆனாலும், 39 எம்பிக்கள் ஆனாலும் அவர்களின் பெயருக்குப் பின்னால் சாதி அடையாளம் இல்லையே. இதுதான் பெரியார் செய்த செயல்’ என்பது போன்ற பதிவுகளை இட்டு ஜெய் பெரியார் என்று ஹேஷ்டேக் செய்து வருகிறார்கள். இன்று மாலை வரை இந்த ஹேஷ்டேக் 75 ஆயிரத்துக்கு மேலானோரால் ட்விட் செய்யப்பட்டுள்ளது.

இதில் கவனிக்கத் தக்க அம்சம் முருகனுக்கு வெற்றி வேல் வீர வேல் என்றும், பெரியாருக்கு ஜெய் பெரியார் என்றும் ஹேஷ்டேக் செய்யப்பட்டுள்ளதுதான்.

**-வேந்தன்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share