ஆண் வேட்பாளரின் நகைகளைப் பார்க்கக் கூடும் பெண்கள் கூட்டம்!

Published On:

| By Balaji

தமிழகத்தில் நடைபெறும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் பெரும்பாலான வேட்பாளர்கள் வாக்காளர்களைக் கவர வித்யாச வித்யாசமாக பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர்.

தோசை சுட்டுக்கொடுப்பது, இஸ்திரி போடுவது, நடனமாடுவது, துணி துவைப்பது, என ஏதாவது செய்து பலரின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர். அதுபோன்று, தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் பனங்காட்டு படை கட்சி சார்பில் சுயேச்சையாகப் போட்டியிடும் அதன் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார், நடமாடும் நகை கடை போல் வந்து பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.

**ஹெலிகாப்டருக்கு அனுமதி மறுப்பு**

மூன்று கிலோ தங்கநகை அணிந்து கொண்டு, நேற்று கட்சி தலைவர் ராக்கெட் ராஜாவுடன் பிரச்சாரத்திற்கு ஹெலிகாப்டரில் பறந்து வந்தார் ஹரி நாடார். நேற்று மாலை 4.30 மணிக்கு திருவனந்தபுரத்திலிருந்து ஆலங்குளத்துக்கு ஹெலிகாப்டர் மூலம் ராக்கெட் ராஜா மற்றும் ஹரிநாடார் பிரச்சாரத்துக்காக வந்தனர். அவர்கள் தரை இறங்குவதற்கு காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது.

இதனை கண்டித்து கட்சியின் மாவட்ட செயலாளர் ஆனந்த் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் தென்காசி – திருநெல்வேலி சாலை ஆலங்குளம் காமராஜர் சிலை அருகில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுத்த அதிகாரிகள் மற்றும் போலீசாரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

போராட்டம் நடத்தியவர்களிடம் ஆலங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து போராட்டத்தை விலக்கிக் கொண்ட பனங்காட்டு படை கட்சி தொண்டர்கள் பொதுக்கூட்ட திடலுக்கு ஊர்வலமாக சென்றனர். இதனிடையே ராக்கெட் ராஜா வந்த ஹெலிகாப்டர் தூத்துக்குடி விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டசபை தொகுதியில் திமுக சார்பில் பூங்கோதை ஆலடி அருணா எம்எல்ஏ போட்டியிடுகிறார். அதிமுக தரப்பில் முன்னாள் சபாநாயகர் பிஎச் பாண்டியன் மகன் மனோஜ் பாண்டியன் போட்டியிடுகிறார். இரு பெரிய கட்சிகள் சார்பிலும் பிரபலமான வேட்பாளர்கள் களம் காணும் தொகுதியான ஆலங்குளத்தில் இந்த இரு வேட்பாளர்களுக்குப் பிரச்சாரங்களில் கூடும் கூட்டத்தை விட இங்கு சுயேச்சையாகப் போட்டியிடும் பனங்காட்டு படை கட்சியின் ஹரி நாடார் பிரச்சாரக் கூட்டங்களுக்குத்தான் அதிக அளவில் கூட்டம் சேர்கிறது. அதிலும், பெண்கள் கூட்டம் அதிகமாக வருகிறது.

**நடமாடும் நகை கடை**

ஹரி நாடார் பிரச்சார கூட்டத்துக்கு காரணம் அவர் உடலில் அணிந்திருக்கும் நகைகள்தான். ஒரு நடமாடும் நகை கடை போல காட்சியளிக்கிறார். பிரச்சாரத்துக்குச் செல்லும்போதும் கைகள், கழுத்து நிறைய நகைகளை அள்ளி அணிந்து கொண்டு அவர் சொல்கிறார்.ஹரி நாடாரின், கழுத்திலும், கையிலும் மட்டும் சுமார் 3 கிலோ தங்க நகைகள் உள்ளன. மொத்தம் 11கிலோ தங்க நகைகள் இவரிடம் உள்ளதாம். அதாவது அவர் கையிலும் கழுத்திலும் அணிந்துள்ள நகைகளின் மதிப்பு சுமார் ஒன்றே கால் கோடி என கூறப்படுகிறது.

பொதுவாகவே நகைகள் மீது பெண்களுக்கு மிகுந்த ஆர்வம் இருக்கும். எனவேதான் நகைகள் அணிந்து வரும் ஹரி நாடார் பிரச்சாரத்திற்குப் பெண்கள் கூட்டம் அதிகமாக வருகிறது என்கிறார்கள்.

தேர்தல் களத்தில் உழைத்து தொண்டர்களை அழைத்து வர பிற கட்சிகள் நினைத்தாலும், தனது நகை ஆபரணங்களால், எளிதாக கூட்டத்தைக் கூட்டி வருகிறார் ஹரி நாடார். இப்படித்தான் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் வேட்பாளரை விடவும் அதிகமாக வாக்குகளைப் பெற்றார் ஹரிநாடார். இதனால் எங்கே ஆலங்குளம் தொகுதியிலும் பெருமளவு வாக்குகளை பிரித்து பெரிய கட்சிகளுக்கு சிம்ம சொப்பனமாக வந்துவிடுவாரோ என்று அந்த கட்சி நிர்வாகிகள் கலக்கத்தில் உள்ளார்கள்

**-சக்தி பரமசிவன்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share