தொல்லியல் படிப்பில் தமிழ் மொழியையும் சேர்க்க வேண்டுமென பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய அரசின் தொல்லியல் துறையின் சார்பில், தீனதயாள் உபாத்யாயா தொல்லியல் நிறுவனம் உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தொல்லியல் துறை சார்ந்த 2 ஆண்டு முதுகலைப் பட்டயப் படிப்புக்கான அறிவிப்பை அண்மையில் வெளியிட்டது.
இந்தப் படிப்புக்கு இந்திய வரலாறு, தொல்லியல்துறை, மானுடவியல் மற்றும் செம்மொழிகளான சமஸ்கிருதம், பாலி, பிராகிருதம் மற்றும் அரபு மொழிகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்திருந்தது. ஆனால், இந்தியாவில் உள்ள செம்மொழியான தமிழ் மொழி இதில் இடம்பெறவில்லை. இதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கில், தொல்லியல் பட்டயப் படிப்பில் தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், பழைய அறிவிப்பை ரத்து செய்து, தமிழையும் சேர்த்து புதிய அறிவிப்பு வெளியிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (அக்டோபர் 8) கடிதம் எழுதியுள்ளார். அதில், “முதுகலை தொல்லியல் பட்டயப்படிப்பில் சேருவதற்கு, சமஸ்கிருதம் பாலி, பிராகிருதி, பெர்சியன், அரபி மொழிகள் குறைந்தபட்ச தகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதே நேரத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், “பல மொழிகளின் 48,000 பழங்கால கல்வெட்டுகளில் 28,000க்கும் அதிகமானவை தமிழில் உள்ளன. 2004ஆம் ஆண்டிலேயே செம்மொழியாக அறிவிக்கப்பட்ட தமிழ் தற்போது புறக்கணிக்கப்பட்டது வேதனையளிக்கிறது. ஆகவே, மத்திய தொல்லியல் துறையின் பட்டயப் படிப்பில் சேர கல்வித்தகுதியாக தமிழ்மொழியையும் சேர்க்க வேண்டும். தமிழ்மொழியை சேர்ப்பதற்கான நடவடிக்கையை பிரதமர் மேற்கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
**எழில்**
�,