நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பயணம் தொடர்பாக நேற்று முன்தினம் (மார்ச் 12) சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது கட்சி ஆரம்பிப்பார், கட்சியின் பேரை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு மாறாக தற்போது அரசியல், ஆட்சி தொடர்பாகப் பேசியிருந்தார்.
அவர் பேசுகையில், “தமிழகத்தில் இதுவரையில் அண்ணா உருவாக்கிய தலைவர்களே இருந்துள்ளனர். இனி வரும் காலங்களில் இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும். தற்போது உள்ள சிஸ்டத்தை சரி செய்யாமல் ஆட்சிக்கு வந்தால் ஒரு பிரயோஜனமும் இல்லை. முதலில் அரசியலில் மாற்றம் வர வேண்டும். அதன் பின் ஆட்சியில் மாற்றம் வேண்டும்” என்று தெரிவித்தார்.
அவர் பேசியது கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. ரஜினி பேசியது எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அரசியல் கட்சியினர் விவாதிக்கத் தொடங்கியிருக்கின்றனர். ஊடகங்களிலும் ரஜினி பேசியது குறித்து விவாதங்கள் நடைபெற்றன.
இந்நிலையில், இன்று (மார்ச் 14) தனது கருத்தை மக்களிடம் சென்று சேர்த்ததற்கு நன்றி என்று ரஜினி தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில், ”அரசியல் மாற்றம்… ஆட்சி மாற்றம் இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை என்கிற கருத்தை பாமர மக்களும் பேசுகின்ற,சிந்திக்கின்ற வகையில் கொண்டு போய் சேர்த்த ஊடகங்களுக்கும்,பத்திரிகைகளுக்கும், சமூக வலைதளங்களுக்கும், மன்ற உறுப்பினர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி” என்று பதிவிட்டுள்ளார். அவரைப் பற்றி பல்வேறு விமர்சனங்களும், கருத்துகளும் பரவி வரும் நிலையில் இவ்வாறு பதிவிட்டுள்ளார் ரஜினி.
**கவிபிரியா**�,