நேற்று (ஆகஸ்டு5) காலமான அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் உடல் இன்று (ஆகஸ்டு 6) அதிகாலை சென்னை தண்டையார்பேட்டையில் இருக்கும் அவரது இல்லத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.
காலை எட்டு மணியளவில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேரில் சென்று மதுசூதனன் உடலுக்கு மரியாதை செலுத்தினார்கள்.
அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அங்கே வந்தார். ஸ்டாலினுடன் அமைச்சர் சேகர்பாபுவும் வந்தார். சேகர்பாபுவின் நெருங்கிய உறவினரான மதுசூதனன்தான், சேகர்பாபுவை அரசியலுக்குக் கொண்டுவந்தார். மதுசூதனனின் சிஷ்யராகவே தொடர்ந்து இருந்தார் சேகர்பாபு. அந்த நினைவுகளில் சேகர்பாபுவின் கண்கள் கலங்கின.
முதல்வர் வந்ததும் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி, மதுசூதனனின் குடும்பத்தாரிடம் துக்கம் விசாரித்தார். அப்போது நடுவில் முதல்வரை அமரவைத்து இரு பக்கமும் பன்னீரும், எடப்பாடியும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். இந்த காட்சி அரசியல் நாகரிகத்துக்கு உதாரணமாக இருந்தது.
இன்று அதிகாலையே வந்து மதுசூதனனுக்கு அஞ்சலி செலுத்த திட்டமிட்டிருந்தார் சசிகலா. ஆனால் மருத்துவமனையில் இருந்து உடல் வந்ததும் செய்ய வேண்டிய இறுதிச் சடங்குகள் இருந்ததால், சசிகலா தன் திட்டத்தை மாற்றியமைத்தார்.
சுமார் 9.30 மணியளவில் சசிகலா அஞ்சலி செலுத்த வருகிறார் என்ற தகவல் கிடைக்க துக்க வீட்டில் இருந்து பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் மெல்லப் புறப்பட்டனர். சிறிது நேரத்தில் பத்துக்கும் மேற்பட்ட கார்கள் புடைசூழ சசிகலா வந்தார். அவர் வரும் தகவல் அமமுக மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை. சசிகலா வந்து மதுசூதனனுக்கு மரியாதை செலுத்திவிட்டு, அவரது குடும்பப் பெண்களிடம் துக்கம் விசாரித்துவிட்டுப் புறப்பட்டுச் சென்றார்.
மதுசூதனன் வீட்டில் குவிந்திருந்த அதிமுகவினர், “முன்னாள் அமைச்சர்கள் மேல கேஸ் போட்டு அடுத்தடுத்து பழிவாங்கக் காத்திருக்கிற முதல்வர் ஸ்டாலினுக்கு இரண்டு பக்கமும் உட்கார்ந்துக்கிட்டு பன்னீரும் எடப்பாடியும் பேசிக்கிட்டிருக்காங்க. ஆனால் அம்மா விரும்பியபடி நூறாண்டு அதிமுக ஆட்சி இருக்கணும்னு சொல்ற சசிகலாவை சந்திக்க கூட விரும்பாம முன்கூட்டியே புறப்பட்டு போயிடறாங்க. ஏன் இப்படினு புரிஞ்சுக்கவே முடியலை”என்கிறார்கள்.
**-வணங்காமுடிவேந்தன்**
�,”