கோயில் நிலங்களில் பட்டா வழங்குவதற்கு பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.
அரசு புறம்போக்கு மற்றும் கோயில் நிலங்களில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தவர்களுக்குப் பட்டா வழங்கும் வகையில் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணை சட்ட விரோதமாக நிலத்தை ஆக்கிரமிப்பவர்களுக்கு உதவும் வகையில் இருப்பதாகவும், இதற்குத் தடை விதிக்க கோரியும் ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை முடிந்து விரைவில் தீர்ப்பு வரவுள்ளது.
இந்த நிலையில் தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று (மார்ச் 3) செய்தியாளர்களைச் சந்தித்த ஹெச்.ராஜா, “4 லட்சம் ஏக்கர் கோயில் நிலங்களில் வெறும் 600 ஏக்கர்களுக்கு மட்டும்தான் பட்டா அளிக்கிறோம் எனத் தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கோயில் நிலங்கள் அரசின் நிலம் அல்ல. வெறும் 600 ஏக்கர் நிலம்தான் தேவை என்றால் அதைப் புறம்போக்கு நிலங்களிலிருந்து கொடுக்கலாம் அல்லவா? 600 ஏக்கர் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என அரசே ஒப்புக்கொள்கிறது .
இந்து அறநிலையத் துறை என்பது இந்து அறம் அழிக்கும் துறையாக 50 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. ஆக்கிரமித்ததால்தான் பட்டா கொடுக்கிறோம் என அரசு சொல்கிறது என்றால், ஆக்கிரமிக்க அனுமதித்த அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு என்ன தண்டனை வழங்குவது. சர்ச், மசூதி நிலங்களில் 600 ஏக்கரை அரசாங்கம் தொட முடியுமா” எனக் கேள்வி எழுப்பினார்.
கோயில் நிலங்களுக்கு பட்டா வழங்குவதை அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்த அவர், “கோயில் நிலங்களை ஆக்கிரமிக்காமல் பார்ப்பதுதானே அறநிலையத் துறை அதிகாரிகளின் வேலை. ஒரு துறையே இந்து மதத்துக்கு எதிராகச் செயல்படுகிறது” என்று விமர்சித்தார்.
மேலும், “அதிமுக அரசை இந்து விரோத அரசாகச் சித்திரிக்கும் முயற்சியில் சில அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதன் செயல்பாடுகளுக்குத் தமிழக அரசு பலிகடா ஆகிவிடக் கூடாது. கோயில் நிலங்களைக் காசு கொடுத்து வாங்கி ஏன் கொடுக்க வேண்டும். புறம்போக்கு நிலங்களை இலவசமாகக் கொடுக்கலாம் அல்லவா” என்றும் ஹெச்.ராஜா கூறினார்.
**-எழில்**�,