தஞ்சை மாணவி வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
அரியலூரைச் சேர்ந்த மாணவி தஞ்சையில் திருக்காட்டுப்பள்ளியில் அருகே மைக்கேல்பட்டியில் அமைந்துள்ள தூய இருதய பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த மாதம் அந்த மாணவி பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார். இறப்பதற்கு முன்பு பள்ளி நிர்வாகம் மத மாற்றத்துக்குக் கட்டாயப்படுத்தியதால்தான் விஷம் குடித்ததாக மாணவி கூறியதாக வெளியான வீடியோ தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை முன்னிறுத்தி பாஜக பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தது.
இதற்கிடையில் பள்ளி விடுதி காப்பாளர் தன்னை அதிக வேலை வாங்கியதால், படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை, அதனால்தான் விஷம் அருந்தினேன் என்று மாணவி கூறும் மற்றொரு வீடியோவும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
மாணவி வழக்கை சிபிசிஐடி அல்லது வேறு ஒரு சுயாதீன அமைப்புக்கு மாற்றக் கோரி மாணவியின் தந்தை முருகானந்தம் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்து வந்தார். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்து, தீர்ப்புக்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
கடந்த ஜனவரி 31ஆம் தேதி இந்த வழக்கு அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், விசாரணை முடிவடைவதற்கு முன்பாகவே தஞ்சை எஸ்பியும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சரும் மாணவி மரணத்துக்கு மத மாற்றம் காரணமில்லை என்று கூறுகின்றனர். அதனால், இந்த விவகாரத்தில் மாநில காவல் துறை விசாரணையைத் தொடர்ந்தால், தனக்கு நீதி கிடைக்காது என்று மனுதாரர் அச்சப்படுகிறார். அவரின் அச்சம் நியாயமானதுதான். மாணவி விவகாரத்தில் மத மாற்ற முயற்சி நடைபெற்றது என்ற குற்றச்சாட்டு தவறு என்று முழுவதுமாக மறுக்க முடியாது. முக்கிய அதிகாரிகளே இந்த விஷயத்தில் மத மாற்றம் இல்லை என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளதால், இனி மேலும் மாநில காவல் துறை விசாரணையை தொடர்வது சரியாக இருக்காது என்றுக் கூறி மாணவி வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக காவல் துறை தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அதில், “தஞ்சை மாணவி விவகாரத்தில் ஒரு ஏடிஎஸ்பியை நியமனம் செய்து விசாரணை நடந்து வந்தது. அந்த மாணவி பேசிய வீடியோவை வெளியிட்ட செல்போனையும் கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி விடுதி காப்பாளரும் கைது செய்யப்பட்டுள்ளார். இதுவரை 64 முறை விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக காவல் துறை தனக்கான விசாரணையைச் சிறப்பாக செய்து வந்தது. இந்த நிலையில் திடீரென வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கடந்த மூன்று தினங்களுக்கு முன்னதாக உத்தரவிட்டுள்ளது. மாணவி வழக்கை மாநில காவல் துறையிடமிருந்து சிபிஐக்கு மாற்ற வேண்டிய எந்த அவசியமும் இல்லை. அதனால், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும். மேலும் மாநில காவல் துறை விசாரணைக்கு எதிராக உயர் நீதிமன்றம் தெரிவித்த சில எதிர்மறையான கருத்துகளை நீக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், மாணவியின் தந்தை முருகானந்தம் உச்ச நீதிமன்றத்தில் நேற்று கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், தனது மகள் மரணம் தொடர்பாக யாரேனும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தால், தனது தரப்பையும் கேட்ட பிறகே எந்த உத்தரவும் பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
**வினிதா**
மாணவி வழக்கு சிபிஐக்கு மாற்றம்: தமிழ்நாடு அரசு மேல்முறையீடு!
Published On:
| By admin

இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel