335 பதவியிடங்களுக்கு மறைமுகத் தேர்தல்: தேர்தல் ஆணையம்!

politics

ஒத்திவைக்கப்பட்ட இடங்களுக்கு வரும் 30ஆம் தேதி மறைமுகத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர், ஒன்றியப் பெருந்தலைவர், ஒன்றியத் துணைத் தலைவர், ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் பதவியிடங்களுக்கான மறைமுகத் தேர்தல் கடந்த 11ஆம் தேதி நடைபெற்றது. சிவகங்கை மாவட்ட ஊராட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் போதிய உறுப்பினர்கள் வருகை தராததால் ஒத்திவைக்கப்பட்டது.

சட்டம் ஒழுங்கு பிரச்சினை, போதிய உறுப்பினர்கள் வருகையின்மை, தேர்தல் நடத்தும் அலுவலருக்கு உடல்நலக் குறைவு உள்ளிட்ட காரணங்களைக் காட்டி பல இடங்களில் ஒன்றிய பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. தேர்தலில் ஆளுங்கட்சியான அதிமுகவை விட திமுக அதிக இடங்களில் வெற்றிபெற்றிருந்தாலும், மறைமுகத் தேர்தலில் அதிமுக அதிக இடங்களைக் கைப்பற்றியது. அதிமுக அதிக இடங்களைக் கைப்பற்றுவதற்கு வசதியாகவே தேர்தல் ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டி திமுக வழக்கு தொடர்ந்தது.

இந்த நிலையில் தேர்தல் ஆணையம் இன்று (ஜனவரி 22) வெளியிட்ட அறிவிப்பில், “பல்வேறு காரணங்களுக்காக கடந்த 11ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்ட மறைமுகத் தேர்தலை ஜனவரி 30ஆம் தேதி நடத்த தேர்தல் அலுவலர்களுக்கு தேர்தல் ஆணையம் அறிவுரை வழங்கியுள்ளது. அதன்படி, 1 மாவட்ட ஊராட்சித் தலைவர், 1 மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் (சிவகங்கை), 26 ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர், 41 ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர், 266 கிராம ஊராட்சி துணைத் தலைவர் என மொத்தம் 335 பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஊராட்சித் தலைவர், ஒன்றிய பெருந்தலைவர், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் உள்ளிட்ட பதவியிடங்களுக்கு காலை 10.30 மணிக்கும், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர், ஒன்றிய துணைத் தலைவர் பதவியிடங்களுக்கு பிற்பகல் 3 மணிக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *