த்தி, ஷார்ப்னர் உள்ளிட்ட பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டுள்ளது.
47ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஒன்றிய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமையில் சண்டிகரில் ஜூன் 28, 29 ஆகிய இரு தேதிகளில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஒன்றிய நிதித் துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் பல்வேறு பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி விகிதத்தை மாற்றியமைப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டது.
அதன்படி, அச்சு மற்றும் எழுது பொருளுக்கான மை, வெட்டுப்பலகையுடன் கூடிய கத்தி, பென்சில், ஷார்ப்னர், பிளேடு, கரண்டி, கேக் வெட்டும் கத்தி, ஆழமான குழாய், கிணறு ஆழ்துளை கிணற்றுக்குள் வைக்கப்படும் பம்புகள், தண்ணீர் பம்புகள், சைக்கிள் பம்புகள், தூய்மைப்படுத்தும் இயந்திரங்கள், முட்டைகளை வரிசைப்படுத்துவதற்கான இயந்திரங்கள், பழங்கள் அல்லது பிற விவசாயப் பொருட்கள் மற்றும் அதன் பாகங்கள், பால் கறக்கும் இயந்திரங்கள் மற்றும் பால் இயந்திரங்களைச் சுத்தம் செய்வதற்கான இயந்திரங்கள், எல்இடி விளக்குகள், விளக்குகள் மற்றும் சாதனங்கள், அவற்றின் உலோக அச்சிடப்பட்ட சர்க்யூட் பலகை, வரைதல் மற்றும் குறிப்பதற்கான கருவிகள் ஆகியவற்றுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
விதைகள், தானியங்கள் ஆகியவற்றை தூய்மைப்படுத்தும் இயந்திரங்கள், தரம் பிரிப்பதற்கான இயந்திரங்கள், அரைக்கும் தொழிலில் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள், கிரைண்டர்கள், சூரிய சக்தியால் இயங்கும் வாட்டர் ஹீட்டர்கள், தயாரித்து முடிக்கப்பட்ட தோல்கள் பொருட்கள் ஆகிய பொருட்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரி 5 சதவிகிதத்திலிருந்து 12 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சேவைத் துறையைப் பொறுத்தவரைத் தோல் பதப்படுத்துதல் தொடர்பான வேலை, தோல் பொருட்கள் மற்றும் காலணி உற்பத்தி தொடர்பான வேலை, களிமண் செங்கல் உற்பத்தி தொடர்பான வேலை, ஒன்றிய மற்றும் மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுக்கு முக்கியமாக நில வேலைகள் மற்றும் அதன் துணை ஒப்பந்தங்களை உள்ளடக்கிய பணி ஒப்பந்தங்கள் ஆகியவற்றுக்கான ஜிஎஸ்டி வரி 5 சதவிகிதத்திலிருந்து 12 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சாலைகள், பாலங்கள், ரயில்வே, மெட்ரோ, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், சுடுகாடு போன்றவற்றுக்கான பணி ஒப்பந்தம், ஒன்றிய மற்றும் மாநில அரசுகள், வரலாற்று நினைவுச் சின்னங்கள், கால்வாய்கள், அணைகள், பைப்லைன்கள், நீர் விநியோகத்திற்கான ஆலைகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் போன்றவற்றுக்கான உள்ளூர் அதிகாரிகள் மற்றும் அதன் துணை ஒப்பந்ததாரர்களுக்குப் பணி ஒப்பந்தம் ஆகிய பணிகளுக்கான சரக்கு மற்றும் சேவை வரி 12 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
எலும்பியல் சாதனம் – பிளவுகள் மற்றும் பிற எலும்பு முறிவு உபகரணங்கள், உடலின் செயற்கை பாகங்கள், குறைபாடு அல்லது இயலாமைக்கு ஈடுசெய்ய, அணிந்திருக்கும் அல்லது எடுத்துச் செல்லப்படும் அல்லது உடலில் பொருத்தப்படும் பிற உபகரணங்கள், உள்விழி லென்ஸ் ஆகியவற்றுக்கான சரக்கு மற்றும் சேவை வரி 12 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இரு நாட்கள் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் முடிந்த நிலையில் அடுத்த கூட்டம் மதுரையில் நடைபெறும் என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இதற்கு நன்றி தெரிவித்துள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், “எங்களின் அழைப்பை ஏற்று மதுரையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை நடத்த ஒப்புக்கொண்ட ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் ஒன்றிய அமைச்சர்களுக்கு நன்றி. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு வருகை தரும் மாநில அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளைக் கோயில் நகரம் மற்றும் அதன் மக்கள் அன்புடன் வரவேற்கிறோம்” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
**-பிரியா**