மதுரை சுங்குடி சேலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரி உத்தரவைக் கைவிடக்கோரி ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் சு.வெங்கடேசன் எம்.பி நேரில் வலியுறுத்தினார்.
தமிழகத்தின் முக்கிய அடையாளங்களில் பெருமை சேர்க்கும் ஒன்றாக சுங்குடி சேலை உள்ளது. சுங்குடி சேலை மதுரையின் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டு புவிசார் குறியீட்டு எண் வழங்கப்பட்டுள்ளது. தற்போது சுங்குடி சேலைகளுக்கு ஜனவரி முதல் 12 சதவிகித ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பல்லாயிரம் குடும்பங்கள் குடிசைத் தொழிலாக சுங்குடி புடவைகளை நெய்து வருகின்றனர். மேலும் அடித்தட்டு மக்கள் உடுத்தும் சுங்குடி சேலைகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு மிகவும் சுமையேற்றும் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதற்கு கடும் ஆட்சேபனை எழுந்துள்ளது.
இந்த நிலையில், சுங்குடி சேலைகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பைக் கைவிடக் கோரி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மதுரை சிபிஎம் கட்சியைச் சேர்ந்த சு.வெங்கடேசன் எம்.பி நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.
“சுங்குடி சாரீஸ் என்று அழைக்கப்படும் சுங்குடி புடவைகள் மதுரையின் அடையாளங்களில் ஒன்று. மொழிச் சிறுபான்மையினராக உள்ள சௌராஷ்டிரா சமூகத்தைச் சார்ந்த மக்கள் இத்தொழிலில் பராம்பரியமாக ஈடுபட்டு வருகிறார்கள். கைகட்டு வடிவமைப்பு, மெழுகு பிரிண்ட் வடிவமைப்பு, ஸ்கிரின் பிரிண்ட் வடிவமைப்பு, சாயமிடுதல் மற்றும் சலவை செய்தல் போன்ற பணிகள் இத்தொழிலில் உள்ளடக்கம். 10,000 குடும்பங்கள் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளன.
விவசாயக் கூலிப்பெண்கள், மீனவப் பெண்கள் உள்ளிட்ட அடித்தட்டு மக்கள் அணியும் உடையான இச்சுங்குடி சேலைகள் தயாரிக்கும் தொழில் 1995இல் குடிசைத் தொழிலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சிறப்பான, நேர்த்தியான இச்சேலைகளுக்கு புவிசார் குறியீடும் 2005-ல் வழங்கி ஒன்றிய அரசு கெளரவித்துள்ளது.
இத்தகு பெருமை வாய்ந்த சுங்குடி சேலைகள் தயாரிக்கும் தொழில் ஒன்றிய அரசின் வரி விதிப்புக் கொள்கையால் பாதிப்புக்குள்ளாக உள்ளது.
முற்றிலும் வரிவிலக்கு அளிக்க வேண்டிய இத்தொழிலுக்கு 2017ஆம் ஆண்டு ஒன்றிய அரசு 5 சதவிகிதம் வரி விதித்தது. தற்போது 12 சதவிகிதம் ஆக உயர்த்தி ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலாகும் என்று ஆணை பிறப்பித்துள்ளது ஒன்றிய அரசு. எளிய மக்களை பாதிக்கும் இவ்வரி உயர்வை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ஒன்றிய அரசு இந்த வரி உயர்வை திரும்பப் பெறவில்லை என்றால் போராட்டம் நடத்தத் தயாராகி வருகிறார்கள் சுங்குடி சேலை உற்பத்தி செய்யும் நெசவாளர்கள்.
**-ராஜ்**
.�,”