ஸ்டாலின், திருமாவளவன், உள்ளிட்ட தலைவர்கள் வரும் 26ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டுமென சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வலியுறுத்தி 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ஆம் தேதி திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. சென்னை மெரினா கடற்கரை சாலையில் உழைப்பாளர் சிலை அருகே மறியலில் ஈடுபட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அப்போதைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், விசிக தலைவர் திருமாவளவன், மமக தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக தலைவர்கள் மீது அனுமதியின்றி கூடுதல், பொதுமக்களுக்கு இடையூறு செய்தல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கு விசாரணை எம்.எல்.ஏ, எம்.பி.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. வழக்கு கடந்த 20ஆம் தேதி நீதிபதி ரமேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, ஸ்டாலின் உள்ளிட்டோர் ஆஜராகவில்லை. இதனையடுத்து, ஸ்டாலின், திருமாவளவன் உள்ளிட்டோர் வரும் 26ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென சம்மன் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், 26ஆம் தேதி தலைவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.�,