ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ கே.பழனிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .
கொரோனா வைரஸ் தொற்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வேகமாகப் பரவி வருகிறது. எனினும், அரசியல் கட்சியினர், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் கடந்த ஜூன் 2ஆம் தேதி திமுக எம்.எல்.ஏ அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த ஜூன் 10ஆம் தேதி உயிரிழந்தார்.
இந்த சூழலில் தற்போது அதிமுக எம்எல்ஏ ஒருவருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினராக உள்ள அதிமுகவைச் சேர்ந்த கே .பழனிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
லேசான காய்ச்சலுடன் நேற்று இரவு எம்.எல்.ஏ பழனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவரின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் மியாட் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எம்.எல்.ஏ பழனிக்கு, நோய்த் தொற்று பாதிப்பு ஏற்பட்டதற்கான சோர்ஸ் இன்னும் கண்டறியப்படாத நிலையில், தனது தொகுதியில் நிவாரண பணிகளில் ஈடுபட்டிருக்கும் போது தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த சூழலில் அவரது குடும்பத்தினர் உட்பட எம்.எல்.ஏ.வுடன் தொடர்பிலிருந்த அனைவரையும் தனிமைப்படுத்தி கொரோனா சோதனைக்கு உட்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக ஜூன் 6ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் தொகுதி, மாங்காடு பேரூராட்சி பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அரிசி காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை எம்.எல்.ஏ கே.பழனி வழங்கியுள்ளார். அதுபோன்று ஜூன் 9ஆம் தேதி குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம் மணிமங்கலம் ஊராட்சியைச் சேர்ந்த 16 பேருக்கும் குடிசை மாற்று வாரியம் சார்பில் வீடு கட்டுவதற்கான ஆணையை வழங்கியுள்ளார்.
இவ்வாறு மக்கள் பணி மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வந்த நிலையில் அவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
**-கவிபிரியா**
�,