ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நேற்று (மார்ச் 5) சென்னையில் நடைபெற்றது. கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி,
“கட்சி தொடங்குவது குறித்தான விஷயங்களை விவாதிப்பதற்காக ஓர் ஆண்டுக்குப் பிறகு மாவட்டச் செயலாளர்களைச் சந்தித்தேன். அவர்களின் நிறைய கேள்விகளுக்கு நான் பதிலளித்தேன். நிறைய விஷயங்களைப் பரிமாறிக்கொண்டோம். மாவட்டச் செயலாளர்களுக்குத் திருப்தியாக இருந்தது. ஆனால், ஒரு விஷயத்தில் எனக்குத் திருப்தி கிடையாது, ஏமாற்றம்தான். அது என்ன என்பதை தற்போது சொல்ல விரும்பவில்லை. நேரம் வரும்போது சொல்கிறேன்” என்று தெரிவித்தார்.
[ரஜினிக்கு ஏமாற்றம் அளித்த விஷயம்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/politics/2020/03/05/30/rmm-district-secretary-meeting-rajini-discussed) என்ன என்பதைக் கூட்டத்தில் கலந்துகொண்ட சில மாவட்டச் செயலாளர்களிடமே பேசினோம்.
“மக்கள் மன்றமாக மாற்றியபோதே ரஜினி எல்லாருக்கும் ஒரு விஷயத்தை எச்சரிக்கையாகத் தெரிவித்தார். மன்றத்தில் யாரும் கோஷ்டி வளர்க்கக் கூடாது என்பதுதான் அந்த எச்சரிக்கை. ஆனால், அதையும் மீறி பொதுஜன அமைப்புக்கே உரிய கோஷ்டிப் பூசல்கள் ரஜினி மன்றத்திலும் இருக்கின்றன. சத்தியநாராயணன் அளவுக்குத் தலையிட்டுத் தீர்த்து வைப்பதில் தலைமை நிர்வாகிகளுக்கு அனுபவம் போதவில்லை என்பதால் இந்தப் பூசல் ரஜினி மக்கள் மன்றத்தின் சில மாவட்டங்களில் அதிகமாகவே இருந்தது.
இதைக் குறிப்பிட்டுத்தான் மாவட்டச் செயலாளர் ஒருவர், ‘மாவட்ட அளவுல அதுக்குக் கீழ சில பேர் கட்டுப்பாட்டை மீறி செயல்படுறாங்க. அதனால மன்றத்தின் பேரு கெட்டுப் போகுது. அவங்களை நீக்க முடியலை. இதுக்கு என்ன வழி?’ என்று கேட்டார்.
இதற்குப் பதில் சொல்லும்போதே ரஜினி தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். ‘நம்ம மன்றத்துல சில பேர் கட்டுப்பாட்டை மீறி செயல்படுறாங்கன்னு நாம பேசுறோம். எல்லா கட்சியிலயும் இன்னிக்கு இப்படித்தான் இருக்கு. ஆனா ஒண்ணு… மத்த கட்சிகள் மாதிரி நாம கிடையாது. மத்த கட்சியில இருக்கிற கோஷ்டிப் பூசல் நம்ம கட்சியில இருக்கக் கூடாது. கட்டுப்பாடு, ஒழுங்கு நம்மகிட்ட இருக்கணும். இதுதான் நான் எதிர்பார்க்குறது. சில இடங்கள்ல இந்தக் கட்டுப்பாடு, ஒழுங்கு இல்லைங்கறதுதான் எனக்கு வருத்தமா இருக்கு, ஏமாற்றமா இருக்கு’ என்று சொல்லியிருக்கிறார் ரஜினி.
ரஜினி என்ன நினைக்கிறார் என்றால், அதிமுகவில் ஓபிஎஸ் – ஈபிஎஸ் இடையே ஏராளமான முரண்பாடுகள் இருந்தும் அவங்க வெளியே ஒண்ணாதான் வர்றாங்க, பேசுறாங்க, சிரிச்சுக்கறாங்க, அறிக்கை விடுறாங்க. அப்படி இருக்கும்போது நம்ம மன்றத்துல இந்த அளவுலயே ஒருத்தருக்கொருத்தர் எதிரா செயல்படக் கூடாது என்று நினைக்கிறார்” என்கிறார்கள்.
**-வேந்தன்**
[யார் யாருடன் கூட்டணி? மாசெக்கள் கூட்டத்தில் மனம் திறந்த ரஜினி](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/politics/2020/03/05/56/rajini-meeting-allaiance-message)�,