லக்கிம்பூர் விவகாரம் தொடர்பாக மக்களவையில் பேச அனுமதி வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தினார். இந்த கோரிக்கையை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை, மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
உத்தரப் பிரதேசத்தில் லக்கிம்பூர் கெரியில் 4 விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர் ஆகியோர் கொல்லப்பட்ட விவகாரத்தில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா அவரது ஆஷிஸ் மிஸ்ரா உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில் லக்கிம்பூர் விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவம் என்பது முன்பே திட்டமிடப்பட்ட சதி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று சிறப்பு விசாரணைக் குழுவின் அதிகாரி எஸ்.பி யாதவ் அறிக்கை தாக்கல் செய்தார்.
இந்தச்சூழலில் இன்று நடைபெற்ற குளிர்கால கூட்டத் தொடரில் லக்கிம்பூர் விவசாயிகள் கொல்லப்பட்டது குறித்தும், இது சதி செயல் என்று கூறப்பட்டுள்ள நிலையில் இதுதொடர்பாக விவாதிக்க வேண்டும் என்றும் மக்களவையில் ராகுல் காந்தி வலியுறுத்தினார்.
அவர் பேசுகையில், “லக்கிம்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகளை விரிவாகப் பேச அனுமதிக்க வேண்டும். இந்த விவகாரத்தின் பின்னணியில் அமைச்சர் அஜய் மிஸ்ரா உள்ளார். இது ஒரு சதி என்று போலீசார் கூறியுள்ளனர். இந்நிலையில் அஜய் மிஸ்ரா அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும். இல்லையெனில் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அவர் ஒரு குற்றவாளி” என்று குறிப்பிட்டார்.
இதையடுத்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இந்த விவகாரம் குறித்துப் பேச அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். அஜய் மிஸ்ராவை நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி தீபெந்தர் சிங் ஹூடா ஒத்திவைப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
**-பிரியா**
�,