குடியரசுத் தலைவர் தேர்தல் இன்று அறிவிப்பு: எதிர்க்கட்சிகளின் நிலை என்ன?

Published On:

| By admin

இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை, தலைமை தேர்தல் ஆணையம் இன்று (ஜூன் 9) பிற்பகல் 3 மணிக்கு அறிவிக்கிறது. தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அரசியலமைப்புச் சட்டத்தின் 62-வது பிரிவின்படி, குடியரசுத் தலைவர் பதவிக்காலம் முடிவதற்குள் அடுத்த குடியரசுத் தலைவருக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

இந்தியாவில் குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்க நடக்கும் தேர்தலில் நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் ஆவர். வாக்குகளின் மதிப்புகள் மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும். உத்தரபிரதேச சட்டமன்ற உறுப்பினரின் வாக்குக்கு அதிக மதிப்பும், அதையடுத்து மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்கு மதிப்புகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
சமீபத்தில் நடந்த உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் பாஜக வெற்றிபெற்றதால் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவுக்கு சாதகமான சூழலே நிலவுகிறது.

2017 குடியரசுத் தலைவர் தேர்தலில், முன்னாள் மக்களவை சபாநாயகர் மீரா குமாரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தனது வேட்பாளராக நிறுத்தியது. அப்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அப்போதைய பிகார் ஆளுநராக இருந்த ராம் நாத் கோவிந்த் நிறுத்தப்பட்டு அவரே வெற்றிபெற்றார்.

தற்போதைய குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் தற்போதைய துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவில் தொடங்கி பலரது பெயர்கள் பேசப்படுகின்றன. அதேநேரம் எதிர்க்கட்சிகளின் சார்பில் ஒருமித்த முடிவெடுக்கப்பட்டு குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான பொது வேட்பாளார் நிறுத்தப்படுவாரா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின் அடிப்படையில் வர இருக்கும் 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த குடியரசுத் தலைவர் தேர்தல் பார்க்கப்படுகிறது.

-**வேந்தன்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share