தி.மு.க., தி.மூ.கா. வேலை முடிந்தது – பி.கே.அன்கோவின் பஞ்சாப் பறப்பு!

Published On:

| By Balaji

தேர்தல் பின்னணி வேலைகளைச் செய்துவரும் ஐபேக் நிறுவனத்தின் பிகே எனப்படும் பிரசாந்த் கிசோர், பஞ்சாப் முதலமைச்சரின் முதன்மை ஆலோசகராக நியமிக்கப்பட்டிருப்பது பல தரப்பினரையும் வியப்படையச் செய்திருக்கிறது. மார்ச் 1 அன்று பிகேவின் நியமன ஆணையை பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங்கே தன் டுவிட்டர் பக்கத்தில் பகிருந்திருந்தார். நேற்று முழுவதும் அது இணையத்தில் தீயாய்ப் பரவியது. அதற்கேயான காரணமும் இல்லாமல் இல்லை.

அமைச்சருக்கு ஈடான இந்தப் பதவிக்காக, பிகேவுக்கு அமைச்சர்களுக்கு தரப்படுவதைப் போல முழுக்க பர்னிச்சர் வசதி செய்யப்பட்ட வீடும் முகாம் அலுவலகமும் வாகன வசதியும் வரம்பில்லாத தொலைபேசிக் கட்டணம், வீட்டுக்கும் முகாம் அலுவலகத்துக்கும் கம்பிவழித் தொலைபேசியும் தொலைநகலியும் உபசரிப்புக்காக மாதம் 5 ஆயிரம் ரூபாயும் ரயில்வண்டியிலும் விமானத்திலும் அமைச்சருக்குரிய முதல்நிலைப் பயணிக்கட்டணமும் வழங்கப்படும் என அந்த மாநிலத்தின் பொதுநிர்வாகத் துறைச் செயலாளர் விவேக பிரதாப் சிங் பிறப்பித்த அரசாணையில் விவரிக்கப்பட்டுள்ளது.

தனியாக ஒரு செயலாளர், ஒரு தனி உதவியாளர், கணினி இயக்குநர், ஒரு எழுத்தர், 2 அலுவலக உதவியாளர்கள் கொண்ட குழுவும் இவருக்காகப் பணியாற்றுவார்கள். ஆனால் இத்தனை பேர் உதவி, அரசு வசதிகளையெல்லாம் பிகேவுக்கு சம்பளம் மட்டும் ஒரே ரூபாய்தானாம்! உண்மைதான், கௌரவ சம்பளமாக மாதம் ஒரு ரூபாய் வழங்கப்படும் என்கிறது பஞ்சாப் அரசின் அந்த ஆணை.

தி.மு.க.வுக்கும் தி.மூ.கா.(திரிணமூல் காங்கிரஸ்) கட்சிக்கும் இப்போது தேர்தல் பின்னணி வேலைகளைச் செய்துவருகிறாரே, எப்படி இரண்டு வேலைகளையும் செய்வார்? விதிகளின்படி அப்படிச் செய்யமுடியுமா என அடுத்தடுத்து கேள்விகள் எழக்கூடும்.

பிகேவின் நியமனம் வெளியான நாள், திமுக தலைவர் ஸ்டாலினின் பிறந்த நாளும்கூட. அன்று காலையில் அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்து இதற்கு பூடகமாக பதில் சொல்கிறது என்கிறார்கள், ஐபேக் வட்டாரத்தில்.

”உங்கள் தலைமையில் வரலாறுகாணாத வெற்றியை திமுக அடையும்; இந்த ஆண்டு உண்மையில் உங்களுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் சிறப்பானதாக இருக்கும்.” என்பதுதான் ஸ்டாலினுக்கு பிகே தெரிவித்த வாழ்த்து.

ஏறத்தாழ ஐபேக் நிறுவனத்தின் வேலைகளுக்கு கைமேல் பலன் கிடைத்துவிட்டதாகவே நம்புகிறார்கள், வாடிக்கையாளர் தரப்பிலும். அண்மையில் வெளியிடப்பட்ட தேர்தல் கருத்துகணிப்பு ஒன்றில்கூட, பிகேவின் தமிழக, மேற்குவங்க வாடிக்கையாளர்கள் இருவருக்கும் சாதகமே என முடிவுகள் சொல்கின்றன.

இப்படியான சூழலிலேயே அடுத்த கட்ட வேலை ஒப்பந்தத்துக்கான முன்னோட்டமே இந்த நியமனம் என வெளிப்படையாகவே பேசப்படுகிறது.

பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் மட்டுமே இதில் அதீத ஆர்வம் காட்டும் நிலையில் கட்சிக்குள்ளும் அமைச்சரவைக்குள்ளும் இந்த நியமனத்துக்கு அதிருப்தியும் வெளிப்பட்டிருக்கிறது. கட்சியின் பஞ்சாப் மாநிலத் தலைவர் சுனில் ஜாகருக்கே ஊடகங்களைப் பார்த்துதான் தகவலே தெரிந்திருக்கிறது. இன்னொரு பொறுப்பாளரான ஆஷா குமாரியும் பிகே தொடர்பாக பொதுவாகவே ஆர்வம் காட்டவில்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலைப் போலவே மீண்டும் பிகே தனக்காக வேலைசெய்ய வருவார் என 2020 ஜூனில் அமரீந்தர் சிங் கூறினார். அப்போதிருந்தே கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் பிகேவை அமர்த்துவதற்கு எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன.

ஆனால் அமரீந்தரோ பிகே மீதும் ஐபேக் மீதும் அசைக்கமுடியாத பிடிமானத்தோடு இருக்கிறார். 2017 சட்டமன்றத் தேர்தலில் தன்னை முதலமைச்சர் ஆக்கியது பிகேவும் அவரின் நிறுவனமும்தான் என திடமாக நம்புகிறார். 117 உறுப்பினர்களைக் கொண்ட பஞ்சாப் சட்டப்பேரவையில் 77 பேரை காங்கிரசுக்கு பெற்றுத்தந்ததில் ஐபேக் மீது அளவில்லாத நம்பிக்கை கொண்டார், அமரீந்தர் சிங். விளைவு, பிகே அவரை விட்டபோதும் அவர் பீகேவை விடுவதாக இல்லை. பீகே வருவார் என இவர் சொல்ல, பீகேவோ காங்கிரசுக்காக இனி வேலைசெய்யமாட்டேன் என சொல்ல, இது முக்கிய விவாதப்பொருளாகவும் ஆனது. எட்டு மாதங்களாக ஓடிக்கொண்டிருந்த இந்த விவகாரத்தில் மார்ச் 1 அன்று மேகங்கள் விலகி வானம் தெளிவாகியிருக்கிறது.

அரசாணைப்படி, முதலமைச்சர் அமரீந்தர் சிங் அந்தப் பதவியில் இருக்கும்வரை பீகேவும் அவரின் முதன்மைச்செயலாளராக இருப்பார். அடுத்த ஆண்டு மார்ச்வாக்கில் பஞ்சாபில் தேர்தல் வரக்கூடும் எனும் நிலையில், அதற்கான தயாரிப்பும் முக்கியம் என நினைக்கிறார், அமரீந்தர். ஆட்சியில் செயல்படுத்தப்படும் கடைசி நேரத் திட்டங்கள் வாக்காளர் மனதில் அழுத்தமாகப் பதியும் என்பது இந்திய அரசியல்வாதிகளின், கட்சிகளின் பார்வையாக இருக்கிறது. இதற்கு முன்னர் பீகாரிலும் முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு அமைச்சர் அந்தஸ்தில் ஆலோசகராகப் பணியாற்றியிருக்கிறார், பிரசாந்த் கிஷோர். அதாவது, நிதிசுடன் கடந்த ஆண்டு ஜனவரியில் முரண்பாடு ஏற்படும்வரை!

மேலும், கடந்த தேர்தலில் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த கேப்டன் அமரீந்தர் சிங்கை, மக்களிடம் கொண்டுசென்றது, ஐபேக்கின் உத்திதான் என்பதை அமரீந்தர் மட்டும் சொல்லவில்லை. அவருடைய கட்சிக்காரர்களும் ஒத்துக்கொள்கிறார்கள். அந்த அளவுக்கு மக்களுக்கு மட்டுமல்ல கட்சிக்காரர்களேகூட எளிதில் அணுகமுடியாத ஒரு புள்ளியாகவே அமரீந்தர் சிங் இருந்துள்ளார்.

’காபி வித் கேப்டன்’, ’தொகுதியில் கேப்டன்’, ’பஞ்சாப் டா கேப்டன்’ ஆகிய பெயர்களில் புதுவகை நிகழ்ச்சிகளை உருவாக்கி, அவற்றின் மூலம் மக்களுக்கும் அமரீந்தருக்கும் இடையிலான இடைவெளியை இல்லாமல் ஆக்கியதைப் போல செய்துகாட்டியது, ஐபேக் நிறுவனம். அதன் பிறகு யார் என்ன சொன்னாலும் ஐபேக் மீதும் அதன் நிறுவனர் பிகே மீதும் அதீதமான நம்பிக்கையோடு இருந்துவருகிறார், அமரீந்தர்.

அவருக்கு தடங்கலாக இருந்தது, கட்சிக்குள் பிரசாந்த் கிசோருக்கு இருந்த எதிர்ப்பு. 2014-ல் மோடி பிரதமரானது, 2015-ல் ஆம் ஆத்மியின் எழுச்சி, அதே ஆண்டில் பீகாரில் பெருங்கூட்டணியின் வெற்றி, ஆந்திரப்பிரதேசத்தில் ஜெகன் மோகனின் வெற்றி என பீகேவின் உத்தி வெற்றியாக பலவற்றை காட்டுகிறார்கள், ஒரு தரப்பில். பீகேவை விரும்பாத தரப்பினரோ, உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி+காங். கூட்டணி தோல்வி, பீகாரில் கடந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் காங்.+ஆர்ஜேடி+இடதுசாரிகள் அணிக்கு வெற்றி நழுவல் போன்றவற்றைச் சுட்டிக்காட்டுகிறார்கள்.

இப்படியான சூழலில், மார்ச் 1 அன்று காணொலிக்காட்சி வாயிலான கூட்டத்தில் அமரீந்தர் சிங்குடன் அலுவல்பூர்வமாகப் பேசி, தன் பணியை ஏற்றுக்கொண்டார், பிரசாந்த் கிசோர்.

அதற்கு முன்னதாக மாநில அமைச்சரவையில் இதற்கான ஒப்புதலையும் அமரீந்தர் வாங்கியிருக்கிறார். சிலர் அதிருப்தியை வெளிப்படுத்தியபோது, இந்த விவகாரத்தில் தன்னையே தீர்மானிக்குமாறு தலைவர் சோனியா கூறிவிட்டார் என சமாதானப்படுத்தினார், முதலமைச்சர். உண்மையில் இரண்டு மாதங்களுக்கு முன்னரே கட்சித் தலைமையிடம் இது தொடர்பாகப் பேசி ஒப்புதலைப் பெற்றுவிட்டார், கேப்டன்.

அமைச்சரவையில் மட்டுமல்லாமல் ஊடகங்களுக்கும் அவர் இதைத் தெரிவித்தார்.

இதில் இன்னொரு உள்கதையையும் சொல்கிறார்கள், காங்கிரஸ் தரப்பில்,

”முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சித்துவுக்கு கட்சியிலோ ஆட்சியிலோ முதன்மையான இடத்தை அளிக்க காங். தலைமை ஆர்வம் காட்டுகிறது; அதாவது, அமைச்சராகவோ மாநில காங்கிரஸ் பொறுப்பாளராகவோ அவர் ஆக்கப்படலாம்; பிகே அந்த வேலையை நாசூக்காகச் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. சித்துவுக்கும் அவருக்கும் ஒருவித இணக்கப்பாடு உண்டு.” என்றும் சொல்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சியின் நடப்புகள், கவிழ்த்துவிடும் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியைப் போல ஆகிவிட்டது. எதுவும் எப்போதும் நடக்கலாம்!

– இளமுருகு

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share