ஊரடங்கு: தனியார் ஊழியர்களின் சம்பளத்தை அரசு தரவேண்டும்!

Published On:

| By Balaji

கொரோனா ஊரடங்கை ஒட்டி பல்வேறு தனியார் தொழில் நிறுவனங்கள் தங்களிடம் பணியாற்றும் ஊழியர்களை வேலை நீக்கம் செய்வது, அல்லது சம்பளம் குறைப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்றன. சிறு நிறுவனங்கள் முதல் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை இப்படி செயல்படும் நிலையில்… தனியார் நிறுவன ஊழியர்களின் சம்பளத்தையும் அரசே ஏற்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று (மே 25) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ கொரோனா தொற்று பாதிப்பால் பொருளாதாரம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் சமூகத்தின் அனைத்து பகுதியினரும் அரசு மற்றும் அரசு நிறுவனங்கள் உதவ வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்துக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, தொழில் நிறுவனங்கள், தாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதை முன்னிறுத்தி பல்வேறு சலுகைகளை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்று கோருகிறார்கள். இந்த கோரிக்கையில் நியாயமிருக்கிறது. அதைப்போன்று, ஒவ்வொரு தொழிலிலும் அங்கமாக இருக்கக்கூடிய தொழிலாளர்களும் மிக கடுமையான பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். அரசு அறிவிக்கும் சலுகைகள் எதுவும் இந்த தொழிலாளர்களை சென்று சேரவில்லை. இந்நிலையில், பல நிறுவனங்கள் கொரோனா பாதிப்பை முன்னிறுத்தி தொழிலாளர்களின் சம்பளத்தை குறைப்பது, சம்பளமில்லா கட்டாய விடுப்பு அளிப்பது, வேலையை விட்டு நீக்குவது என்பது போன்ற கருணையற்றதும், சட்ட விரோதமானதுமான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். இது ஏற்க முடியாததும், கடும் கண்டனத்துக்குரியதுமாகும்” என்று குறிப்பிட்டுள்ள பாலகிருஷ்ணன், மேலும்….

“ஒவ்வொரு நிறுவனமும், கடந்த காலங்களில் தொழிலாளர்களின் கடும் உழைப்பின் காரணமாகவே முன்னேற்றம் அடைந்திருப்பதோடு பெரும் லாபத்தையும் ஈட்டியிருக்கின்றன. அப்போதெல்லாம் லாபத்திற்கு தொழிலாளர்கள்தான் காரணம் என்று கூடுதல் வருவாயை யாரும் அள்ளிக் கொடுத்து விடவில்லை. ஆனால், நெருக்கடி என்று வந்ததும், ஒட்டுமொத்த சுமையையும் தொழிலாளிகள் தலையில் சுமத்தி வீட்டுக்கு அனுப்புவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கையாகும். தொழில்நிறுவனங்கள் தங்களுக்கான சலுகைகளை அரசாங்கத்திடம் கோரும்போது தொழிலாளர்களுக்கான சம்பளம் முழுவதையும் அரசே தர வேண்டும் என கோருவதே நியாயமான அணுகுமுறையாக இருக்கும். பல்வேறு நாடுகளில் சம்பளம் மட்டுமன்றி தொழிலாளர்களுக்கான ஒட்டுமொத்த செலவையும் அரசுகளே ஏற்றுக் கொண்டிருக்கின்றன. பல நாடுகளில் 80 சதவிகிதம் வரை தொழிலாளர் சம்பளங்கள் இவ்வாறு அரசாங்கத்தால் வழங்கப்படுகின்றன” என்று சுட்டிக் காட்டியுள்ளார்.

**-வேந்தன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share