இந்தியாவின் பிரபல செய்தி நிறுவனமான பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியாவுக்கு (பி.டி.ஐ) மத்திய வீட்டுவசதி அமைச்சகம் ரூ .84.48 கோடி அபராதம் விதித்துள்ளது. குத்தகை ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மீறியதாக குற்றம் சாட்டி, இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பிடிஐ செய்தி நிறுவனம் என்பது இந்தியாவின் மிக மூத்த செய்தி நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் செய்திகள்தான் பிரசார் பாரதி. தூர்தர்ஷன் போன்ற அரசு ஊடக நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்களுக்கு தினம் தினம் செய்திகளை அள்ளி வழங்கிக் கொண்டிருகிறது. இதற்காக பிடிஐக்கு ஊடகங்கள் சந்தா தொகை செலுத்தும். அரசு ஊடகமான பிரசார் பாரதி வருடத்துக்கு ஒன்பதரை கோடி ரூபாய் பிடிஐக்கு சந்தா தொகையாக செலுத்துகிறது.
இந்நிலையில் டெல்லி சன்சாத் மார்க் பகுதியில் பிடிஐ நிறுவன அலுவலகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிலத்துக்கு 1984 ஆம் ஆண்டிலிருந்து பி.டி.ஐ நில வாடகை செலுத்தவில்லை என்றும், அந்த நிறுவனம் அடித்தளத்தை ஒரு அலுவலகமாக மாற்றியதன் மூலம் நில ஒதுக்கீடு விதிமுறைகளை தவறாகப் பயன்படுத்தியது’ என்றும் மத்திய வீட்டு வசதித்துறை பிடிஐக்கு இன்று (ஜூலை 14) நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்குள் இந்தத் தொகையை செலுத்துமாறு செய்தி நிறுவனத்திடம் அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
ஜூன் 15 ஆம் தேதி இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான எல்லைப் பிரச்சினையில் லடாக் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் சீன ராணுவத்தால் தாக்கப்பட்டு உயிர்த் தியாகம் செய்தனர். இதன் பிறகு ஜூன் 25 ஆம் தேதி சீனத் தூதர் சன் வீடோங்கின் நேர்காணலை பிடிஐ வெளியிட்டது. ஜூன் 27 அன்று, இந்திய அரசின் செய்தி நிறுவனமான பிரசார் பாரதி, பிடிஐயின் சீன தூதர் பேட்டியை தேச விரோத அறிக்கை என்று குற்றம் சாட்டியயது. பி.டி.ஐ.யின் சந்தாவை ரத்து செய்வதாகவும் எச்சரித்தது. பிடிஐயின் செய்தி அறிக்கையில் இந்தியாவின் நிலைப்பாட்டையும் குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், சீன தூதரகம் பின்னர் நேர்காணலின் சுருக்கப்பட்ட பதிப்பை வெளியிட்டபோது, இந்தியாவின் அறிக்கையை விட்டுவிட்டது.
நேர்காணல் மீதான விமர்சனங்களுக்கு பி.டி.ஐ, நேர்காணல்கள் என்பவை ஊடக நிறுவனங்களுக்கான வழக்கமான வணிகமாகும். இதன் போது பலவிதமான கேள்விகள் கேட்கப்படுகின்றன. சில கருத்துக்கள் செய்திகளை உருவாக்குகின்றன” என்று பதிலளித்தது.
இந்நிலையில்தான் மத்திய அரசு பி.டி.ஐ செய்தி நிறுவனத்திற்கு எதிரான பிரச்சினைகள் இருக்கிறதா என்று தேடத் தொடங்கிய நிலையில், இந்த வீட்டு வசதி வாரிய பிரச்சினையை தூசு தட்டி எடுத்து பிடிஐக்கு எதிராக 84 கோடி ரூபாய் அபராத நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
**-வேந்தன்**�,”