நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அரசு ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக அரசு ஊழியர்கள் புதிய பென்ஷன் திட்டத்தை எதிர்த்தும், சரண்டர் மற்றும் நிலுவையில் உள்ள அரியர்ஸ் கேட்டும் கடந்த அதிமுக ஆட்சியிலிருந்து போராடி வருகின்றனர்.
அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் புதிய பென்ஷன் திட்டத்தை ஒழித்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துவோம், நிலுவையில் உள்ள அரியர்ஸ், சரண்டர் போன்றவற்றை நிறைவேற்றுவோம் என்றார்.
அதனாலே அரசு ஊழியர்கள் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு எதிராகவும் திமுகவுக்கு ஆதரவாகவும் தீவிரமாகச் செயல்பட்டார்கள். மேலும், அரசு ஊழியர்களின் தபால் வாக்குகளும் பெரும்பாலும் திமுக கூட்டணிக்குக் கிடைத்தது.
ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பிறகும் அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. கடந்த டிசம்பர் மாதம் அரசு ஊழியர் சங்க மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகம் தற்போது எதிர்கொண்டிருக்கும் நிதி நெருக்கடியைக் குறிப்பிட்டு, நிதி நிலைமை சரியானதும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று கூறினார்.
ஆட்சிக்கு வந்து சுமார் ஒன்பது மாதங்கள் ஆகிவிட்ட பிறகும் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அரசு ஊழியர்களின் செயல்பாடுகள் அரசுக்கு எதிராகத் திரும்புவதற்கான சிக்னல்கள் தென்படத் தொடங்கியுள்ளன.
தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் அரசு ஊழியர்களுக்கு வாக்குப் பதிவுக்கு சில நாட்களுக்கு முன்பே தபால் ஓட்டு விண்ணப்பங்கள் வழங்கப்படும். அதில் அவர்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்தி அனுப்பி விடுவார்கள்.
ஆனால், திருச்சி மாவட்டத்தில் பல அரசு ஊழியர்கள் தங்களுக்கான தபால் ஓட்டு படிவங்களையே இன்னும் பெற்றுக் கொள்ளவில்லை. கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடர்ச்சியான அறிவுறுத்தல்கள் வந்தபோதும் பல அரசு ஊழியர்கள் தபால் ஓட்டு செலுத்துவதில் ஆர்வமற்று இருக்கிறார்கள். நெருக்கடி அதிகமானால் தபால் ஓட்டுப் படிவங்களை வாங்கி வைத்துக் கொண்டு, அதை போஸ்ட் செய்யாமல் விட்டுவிடலாமா என்றும் அரசு ஊழியர்களுக்குள் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் பல மாவட்டங்களிலும் இந்தப் போக்கு பரவி வருவதாக தகவல்கள் வருகின்றன.
இந்த நிலையில் வரவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அரசு ஊழியர்களின் ஆதரவு பற்றி அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் தமிழ்ச்செல்வியைத் தொடர்புகொண்டு கேட்டோம்.
“இந்த திமுக ஆட்சி, அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை அலட்சியப்படுத்தி வருகிறது செவி கொடுத்துக் கேட்க மறுக்கிறது. நாங்கள் புதிதாக ஏதும் கேட்கவில்லை. எங்கள் உரிமைகளையும் எங்களுக்குச் சேர வேண்டிய சரண்டர் அரியர்ஸ்களைக்கூட கொடுக்க மறுக்கிறது இந்த ஆட்சி.
எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 7ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரையில் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறோம். 9,10 இரண்டு நாட்கள் அந்தந்த அலுவலக நுழைவாயில்களில் ஆர்ப்பாட்டம் செய்கிறோம்.
10ஆம் தேதி அன்று உள்ளாட்சித் தேர்தலில் அரசு ஊழியர்களின் தபால் ஒட்டு போடுவது பற்றி முடிவு செய்வோம். இந்த ஆட்சி மீது அரசு ஊழியர்கள் கடுமையான கோபத்தில் இருப்பதை மட்டும் என்னால் உணர முடிகிறது” என்றார் தமிழ்ச்செல்வி.
**- வணங்காமுடி**
உள்ளாட்சித் தேர்தல்: திமுகவுக்கு எதிராக அரசு ஊழியர்கள்!
Published On:
| By admin

இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel