கொழும்பு-மாலத்தீவு-சிங்கப்பூர்: கோத்தபய எஸ்கேப் ஆனது எப்படி?

politics

 கோ ஹோம் கோடா’ என்ற குரல் கடந்த நான்கு மாதங்களாக இலங்கையில் ஒலிக்காத இடங்களே இல்லை. கொழும்பு நகரைத் தினந்தினம் தொட்டுத் தழுவும் அலைகள் கூட போராட்டக் காரர்களோடு சேர்ந்து இந்த முழக்கத்தையே முன்னெடுத்தன. ஆனால் இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே தன் வீட்டுக்குக் கூட போக முடியாமல் இலங்கையை விட்டே பயந்து பறந்துவிட்டார்.

ராஜபக்சே எப்படி இலங்கையை விட்டு தப்பி ஓடினார்?

இலங்கையில் பொருளாதார நெருக்கடி தொடர்பான பல மாத போராட்டங்களுக்குப் பிறகு, ஜூலை 9 அன்று ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் அதிபர் மற்றும் பிரதமரின் இல்லங்களை முற்றுகையிட்டனர். அதிபர் மாளிகையில் இருக்கும் அவரது நீச்சல் குளத்தில் குதித்துக் குதித்து அதன் நிறத்தையே மாற்றிய போராட்டக் காரர்கள், கோத்தபயவின் மாளிகைக்குள் இருந்த ஆடம்பரங்களைக் கண்டு கோபமாகினர். கோத்தபயவின் அதிகாரபூர்வ இல்லத்துக்குள் திமுதிமுவென நுழைந்த மக்கள், வீட்டை கிட்டத்தட்ட தங்கள் கஸ்டடிக்குள் கொண்டுவந்துவிட்டனர். இதை முன்கூட்டியே உளவுத்துறை மூலம் அறிந்த கோத்தபய மக்கள் திரண்டு வீட்டுக்குள் நுழைவதற்கு சில மணித் துளிகள் முன்னதாகவே வீட்டை ஓட்டி தப்பி ஓடினார் கோத்தபய.

மக்களின் எதிர்ப்புக்கு அடிபணிந்த கோத்தபய ராஜபக்சே, அன்றைய தினமே நாடாளுமன்ற சபாநாயகரிடம், ’நான் 13 ஆம் தேதி ராஜினாமா செய்கிறேன். எனக்கு நான்கு நாள் டைம் கொடுங்கள்’ என்று கேட்டுக் கொண்டார். இதன்படியே கோத்தபய ராஜபக்சே ஜூலை 13 ஆம் தேதி தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்வார் என்று சபாநாயகர் அறிவித்திருந்தார்.

உடனடியாக அதிபர் பதவியை ராஜினாமா செய்துவிட்டால் தான் வெறும் கோத்தபய ஆகிவிடுவோம், அப்போது ராணுவ, போலீஸ் பாதுகாப்பு எதுவும் கிடைக்காது, மக்கள் தன்னை அடித்தே கொன்றுவிடுவார்கள், அதிபர் என்ற பெயரில் இருந்தால் தன்னை கைது செய்யக் கூட முடியாது என்பதால்தான் நாட்டை விட்டு தப்பி ஓடும் வரை அதிபர் என்ற பாதுகாப்புப் பதவியை தன்னுடன் வைத்திருந்தார் கோத்தபய. தன் வீட்டை விட்டு தப்பி வந்த 9 ஆம் தேதியில் இருந்து தன் நாட்டை விட்டு தப்பி ஓடிய 13 ஆம் தேதி வரை நான்கு நாட்கள் கோத்தபய பெரும்பாடு பட்டிருக்கிறார்.

மறுநாள் 10 ஆம் தேதி, இலங்கைக்கு 3,700 மெட்ரிக் டன் எல்பிஜி கப்பலில் வந்து சேர்ந்த பிறகு சமையல் எரிவாயுவை சீராக விநியோகிக்குமாறு அதிகாரிகளுக்கு கோத்தபய உத்தரவிட்டதாக ஒரு அறிவிப்பு வந்தது. ஆனால் கோத்தபய எங்கிருந்து அந்த உத்தரவை பிறப்பித்தார் என்று தெரியவில்லை. காரணம் அப்போது எந்த இடத்திலும் அவர் நிலையாக இல்லை. இலங்கை மண்ணில் இருந்தால் ஆபத்து என்று இலங்கைக் கடல் எல்லைக்குள்ளேயே கடற்படை ரோந்துக் கப்பல் ஒன்றில் அவர் தன் மனைவியோடு சுற்றிக் கொண்டிருந்தார் என்கிறார்கள் லோக்கல் மீடியாக்கள்.

ஜூலை 11, திங்கள்கிழமை மாலை கொழும்பு விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு செல்ல திட்டமிட்டு அங்கே சென்றார் கோத்தபய. இதற்கு முன் கோத்தபய விமான நிலையம் வந்தாலே ஆடி அடங்கும் அதிகாரிகள் இப்போது போராடும் மக்களின் பிரதிநிதிகளாகவே மாறிவிட்டிருந்தனர். ஏனெனில் அந்த அதிகாரிகளின் மகனோ, மகளோ, அண்ணனோ, தம்பியோ போராட்டக் களத்தில் இருந்தனர். அதனால் மானசீகமாக அவர்களும் தங்கள் பணியிலேயே போராட்டத்தை வெளிப்படுத்தினர். ஆமாம். விமான நிலைய குடிவரவு அதிகாரிகள் கோத்தபய ராஜ்கபக்சேவின் பாஸ்போர்ட்டில் முத்திரையிடுவதற்காக விஐபி லவுஞ்ச்சுக்கு அவரை அனுப்ப மறுத்துவிட்டனர்.

‘நாங்களும் போராட்டத்தில்தான் இருக்கிறோம். நாட்டை விட்டு எங்கே செல்கிறீர்கள்?’ என்று அவர்கள் நேரடியாக கேட்க பயந்துகொண்டு, ‘சார்..;. விஐபி லவுஞ்ச்சில் யாரையும் அனுமதிப்பதில்லை. மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதிபரை பொது வழியிலேயே செல்லச் சொல்லுங்கள்’ என்று கூறிவிட்டனர். அடுத்து அதிர்ந்துவிட்டார் கோத்தபய. அவருடன் இருந்த ராணுவப் பாதுகாப்பு வீரர்களாலும் ஒன்றும் செய்யமுடியவில்லை. ஏனெனில் விமான நிலையத்தில் காத்திருந்த பயணிகளும் கோத்தபய வந்திருக்கும் செய்தி அறிந்து அங்கே திரண்டுவிட்டனர். கோத்தபய ராஜக்சேவும், அவரது மனைவியும் விமான நிலையத்திலேயே ஒரே அறையில் இரவு வரை அமர்ந்திருந்தனர். அவரது கண்ணெதிரே நான்கு துபாய் விமானங்கள் போய்விட்டன. அந்த நொடியிலும் கூட இலங்கையின் உச்ச அதிகாரம் மிக்க அதிபர் பதவியில் இருந்தபோதும் கோத்தபய ராஜபக்சேவால் ஒரு விமானத்தைக் கூட பிடிக்க முடியவில்லை. மக்கள் கூட்டம் குறைந்ததும் விமான நிலையத்தில் இருந்து வெளியேறி அருகே உள்ள ஒரு ராணுவ தளத்தில் இரவைக் கழித்திருக்கிறார் கோத்தபய ராஜபக்சே.

12 ஆம் தேதி செவ்வாய் கிழமை முழுதும் ராணுவ தளத்தில் இருந்தபடியே ரணில் விக்ரமசிங்கே, சபாநாயகர் உள்ளிட்ட பலரோடும் போனில் பேசிய கோத்தபய ராஜபக்சே… 13 ஆம் தேதி புதன் கிழமை விடிவதற்குள்ளாகவே தனக்கென வரவழைக்கப்பட்ட விமானப் படை ஜெட் விமானத்தில் மாலத்தீவுக்குப் புறப்பட்டார். விமானப் படை விமானத்தை தனக்காக வரவழைப்பதற்காகத்தான் செவ்வாய் பகல் முழுதும் போராடியிருக்கிறார் கோத்தபய.

அதேநேரம் கொழும்பில் இருந்து வேறு எந்த நாட்டுக்கு செல்வது என்பதும் அவரது அடுத்த போராட்டமாக இருந்திருக்கிறது.

கோத்தபயவின் முதல் சாய்ஸ் இந்தியாதான். இந்திய விமானநிலையம் ஒன்றில் தரையிறங்கவும் அங்கிருந்து சிங்கப்பூர் அல்லது துபாய்க்கு புறப்படவும் அனுமதிக்குமாறு கொழும்பு இந்திய தூதரகத்திடம் கேட்டிருக்கிறார் கோத்தபய ராஜபக்சே. ஆனால் இலங்கை தூதரகம் இதற்கு அனுமதி மறுத்துவிட்டது. அடுத்ததாக கோத்தபயாவின் முயற்சி அமெரிக்கா செல்வது. அங்கே கோத்தபயவின் மகன் குடும்பத்தோடு இருக்கிறார். அமெரிக்க குடியுரிமையும் வைத்திருந்த கோத்தபய ராஜபக்சே அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக அமெரிக்க குடியுரிமையை திருப்பிக் கொடுத்துவிட்டார். ஆனால் இப்போது அதை வழங்க அமெரிக்கா மறுத்துவிட்டது.

அதையடுத்தே தனது நண்பரான மாலத்தீவு முன்னாள் அதிபரும் மாலத்தீவு நாடாளுமன்ற சபாநாயகருமான முகமது நஷீதிடம் பேசி அந்நாட்டின் ஒப்புதலைப் பெற்றிருக்கிறார். ‘மாலத்தீவு மண்ணை தொடும் வரையிலும் அவர் இலங்கை அதிபராக இருப்பார்’ என்ற நிலையில் மாலத்தீவும் இதற்கு அனுமதி அளித்துள்ளது.

12 ஆம் தேதி செவ்வாய் நள்ளிரவே ஏ.என். 32 (Antonov An-32) ரக விமானத்தில் கோத்தபய ராஜபக்சே, அவரது மனைவி லோமா ராஜபக்சே, மற்றும் நான்கு பாதுகாவலர்கள் உள்ளிட்டவர்கள் புறப்பட்டு மாலத்தீவுக்கு சென்றனர். ஆனால் அந்த விமானத்தில் 13 பேர் சென்றார்கள் என்று கொழும்பு ஊடகங்கள் சொல்கின்றன. அந்த விமானத்தில் 29 பேர் வரை பயணிக்க முடியும். கொழும்பில் இருந்து மாலத்தீவுக்கு விமானப் பயணம் இரண்டு மணி நேரம் ஒரு நிமிடம்தான். இந்த சிறு பயணத்துக்கு முன், கோத்தபய தன் நாட்டு அரசியல்வாதிகளிடமும், வெளிநாட்டு தூதரகங்களிடமும் மூன்று நாட்களாக போராடியிருக்கிறார் கோத்தபய ராஜபக்சே.

ஜூலை 13 ஆம் தேதி முழுதும் மாலத்தீவில் இருந்த கோத்தபய ராஜபக்சே இன்று (ஜூலை 14)பிற்பகல் மாலத்தீவில் இருந்து சிங்கப்பூர் சென்றுவிட்டதாக மாஹே ஊடகங்கள் தகவல் வெளியிட்டன. நேற்று மாலையே மாலத்தீவில் இருந்து சிங்கப்பூர் செல்ல வேண்டிய கோத்தபயவுக்கு தனி விமானம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. கொழும்பில் இருந்து தனது உறவினர் மூலம் மாலத்தீவில் தனி விமானம் ஏற்பாடு செய்யச் சொல்லியிருந்தார் கோத்தபய. ஆனால் அவ்வாறு ஏற்பாடு செய்யமுடியவில்லை.

இதையடுத்து இன்று (ஜூலை 14) காலை மாலத்தீவு நேரப்படி காலை 11.30 க்கு (இந்திய நேரம் பகல் 12) சவுதியா788 விமானத்தில் புறப்பட்டார் கோத்தபய. இந்த விமானம் இந்திய நேரப்படி இன்று மாலை 4.45-முதல் 5 மணிக்குள் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தைச் சென்றடைகிறது.

சிங்கப்பூர் கோத்தபய ராஜபக்சேவுக்கு புகலிடம் கொடுத்திருப்பதாக தகவல்கள் வருகின்றன. கோத்தபய சிங்கப்பூரிலேயே இருக்கப் போகிறார் என்றும் , அங்கிருந்து துபாய்க்கு விரைவில் சென்றுவிடுவார் என்றும் இரு வேறு தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.

வேந்தன்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *