அதிமுக இன்று 49 ஆண்டுக் கால பயணத்தை நிறைவு செய்து, 50-வது பொன் விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த பொன்விழாவை முன்னிட்டு அதிமுக தலைமை அலுவலகம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
காலை முதலே எம்ஜிஆர் மாளிகை என பெயர் மாற்றம் செய்யப்பட்ட, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு அதிமுகவினர் வந்த வண்ணம் இருந்தனர். அதுபோன்று முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜு, விஜயபாஸ்கர் என அனைவரும் வருகை தந்தனர்.
தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்துக்கு வருகை தந்தனர் அவர்களது கார்கள் மீது பூக்களை வீசி உற்சாகத்துடன் அதிமுக தொண்டர்கள் வரவேற்றனர்.
பின்னர் இருவரும் அதிமுக தொண்டர்களின் கைத்தட்டல்களுக்கு மத்தியில் கொடி ஏற்றத்துடன் விழாவைத் தொடங்கி வைத்தனர். அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நமது அம்மா நாளிதழ் சார்பில் தயார் செய்யப்பட்ட பொன்விழா சிறப்பு மலரை இருவரும் வெளியிட்டனர். தொடர்ந்து அங்குக் குவிந்திருந்த தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
பின்னர் அங்கிருந்து மெரினாவுக்குச் சென்று அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்களில் ஓபிஎஸ், ஈபிஎஸ் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
**-பிரியா**
�,