முருகர் விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் மௌனம் ஏன்? -வேலுமணி

Published On:

| By Balaji

கறுப்பர் கூட்டம் என்ற யு ட்யூப் சேனலில் முருகன் உள்ளிட்ட இந்து மதத்தினரின் வழிபாட்டுக்குரிய தெய்வங்களை இழித்துப் பழித்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஜூலை 18 ஆம் தேதி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் திமுக தலைவர் ஸ்டாலினை நோக்கி சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.

“தேர்தல் வரும்போது மட்டும் தான் ஒருவருக்கு அனைத்து தரப்பு மக்களும், அவர்களது உணர்வுகளும் திடீர் நினைவிற்கு வரும் போலும். கோவில் கோவிலாக  படியேறும் அரசியல் நேர்த்திக்கடன் நாடகங்களும் அரங்கேறும்.  அரசின் சார்பில், தமிழர் கடவுள் முருகரை அருவருப்பாக நிந்தித்தவர் மீது கைது உட்பட்ட கடும் நடவடிக்கைகள் தொடரும் நிலையில், அனைத்திலும் முந்திக்கொண்டு அறிக்கை விடும் திமுக. தலைவர் மு.க.ஸ்டாலின், உலகெங்கும் வாழும் தமிழர் பலர் போற்றி வணங்கும் வேலவன் முருகர் அவமதிப்புக்கு தன் அறிக்கைக்கு முழு ஊரடங்கு போட்டு அமைதி காக்கும் காரணமென்ன? இதில் சம்மந்தப்பட்டவர்களுக்கும், அவரது கட்சியை சார்ந்தவர்களுக்கும்  தொடர்பு உள்ளதாக சந்தேகங்கள் எழுப்பபடுவதாலா!? அல்லது மதச்சார்பின்மை என்கிற பெயரில் பெரும்பாலான ஒரு சாராருக்கு எதிராக மட்டும் அவரும், அவருடைய கட்சியும் செயல்படுவதாலா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில்தான் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது முருகன் அவமதிப்பு தொடர்பாக திமுக கண்டித்திருக்கிறது, திமுக தலைவரும் கண்டித்திருக்கிறார் என்று கருத்து தெரிவித்திருந்தார். முருகன் அவமதிப்பு விவகாரத்தை பெரிதுபடுத்தி திமுகவுக்கு எதிரான பிரச்சாரங்களை முன்னெடுக்க ஒருபக்கம் பாஜக முயற்சிக்கும் நிலையில்… இதில் பாஜகவை முந்தும் வகையில் நாம் செயல்பட வேண்டும் என்று அதிமுகவினர் முடிவெடுத்துள்ளனர். அதன் ஒரு பகுதியாகத்தான் வேலுமணி, திமுக தலைவரை நோக்கி கேள்விகள் கேட்டிருக்கிறார்.

“கறுப்பர் கூட்டம் யு ட்யூப் சேனலோடு தொடர்பில் இருக்கிறவர்கள் திமுகவுக்காக தேர்தல் பிரசாரம் செய்தனர் என்ற தகவல் கிடைத்ததை அடுத்து அது தொடர்பாக மேலும் விசாரித்து வருகின்றனர். முருகன் விவகாரத்தை பாஜக விட்டாலும் அதிமுக விடாது” என்கிறார்கள் அக்கட்சி வட்டாரத்தில்.

**-வேந்தன்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share