முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்த கருத்துக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 13ஆம் தேதி தமிழக பாஜகவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், “ஜெனரல் பிபின் ராவத் இறந்தது சரிதான் என்று திராவிடர் கழகத்தைச் சேர்ந்த அதிகாரபூர்வ துணை அமைப்புகள் கொண்டாடி இருக்கிறார்கள். ஆனால், இங்குள்ள அரசு அவர்களை எல்லாம் விட்டுவிட்டு, கருத்துச் சுதந்திரத்தை கருவோடு அழிக்க நினைக்கிறது திமுக அரசு. – அண்ணாமலை” என்ற கருத்து வெளியிடப்பட்டிருந்தது.
இதை ஒட்டி நேற்று (டிசம்பர் 14) திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் – கட்சியின் அதிகாரப்பூர்வமான முறையில் நேற்று (13.12.2021) பிற்பகல் 12.48 மணிக்கு திராவிடர் கழகம் பற்றி பொய்யான தகவலைப் பதிவிட்டுள்ளார்.
இந்தியாவின் முப்படைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் விபத்தில் மரணித்தது குறித்து. திராவிடர் கழகத்தின் சார்பில் இரங்கலையும், வீர வணக்கத்தையும் ‘விடுதலை’ நாளேட்டில் 8.12.2021 அன்று வெளியிட்டுள்ளோம்.
உண்மை இவ்வாறு இருக்க, ‘திராவிடர் கழகத்தைச் சேர்ந்த அதிகாரபூர்வமான துணை அமைப்புகள் ஜெனரல் பிபின் ராவத் இறந்தது சரிதான் என்று கொண்டாடி இருப்பதாக’ தமிழ்நாடு பா.ஜ.க-வின் தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
எங்கு, எப்பொழுது திராவிடர் கழகம் பிபின் ராவத் இறந்தது சரிதான் என்று கொண்டாடியது என்று விளக்கப்படவில்லை என்பதிலிருந்தே, இது பொய்யானது என்பது வெளிப்படை.
திராவிடர் கழகத்தின் மீது பொய்யான வகையில் அபாண்டமாக அவதூறு பரப்பி, மக்கள் மத்தியில் திராவிடர் கழகத்தைப் பற்றி மோசமான அபிப்ராயம் உருவாகும் வகையில் செயல்பட்டுள்ளார்.
தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்டு, 75 ஆண்டுகளுக்குமேல் – மக்கள் மத்தியில் நிலவும் தீண்டாமை, ஜாதி, மூட நம்பிக்கை இவற்றை எதிர்த்தும், சமூகநீதி, பெண்ணுரிமை, மதச்சார்பற்ற தன்மை, பகுத்தறிவுப் பிரச்சாரத்தையும், செயல்பாடுகளையும் மேற்கொண்டுவரும் அரசியல் சார்பில்லாத ஒரு சமூக சீர்திருத்த இயக்கத்தின்மீது அவதூறு பரப்பியுள்ள தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மீது சட்டப்படியான உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு அரசையும், குறிப்பாகக் காவல் துறையையும் கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறியுள்ளார் வீரமணி.
**-வேந்தன்**
�,