சட்டமன்றத் தேர்தலை ஒட்டி, வேட்பு மனு தாக்கல் நிறைவு மார்ச் 20ஆம் தேதியோடு நிறைவு பெற்றுவிட்ட நிலையில், வேட்புமனுக்களை வாபஸ் வாங்க மார்ச் 22 ஆம்தேதி கடைசி நாள்.
தமிழகத்தின் பல தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர்களை எதிர்த்து அந்தந்த கட்சிகளில் இருந்தே போட்டியிடுகிறார்கள். 22 ஆம்தேதிக்குள் அவர்களை வாபஸ் வாங்கவைக்கும் முயற்சிகளில் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிரமாக இருக்கிறார்கள்.
அதிமுக, திமுக இரண்டு அணிகளிலும் இந்த சுயேச்சைகள் களமிறங்கியிருக்கிறார்கள். அதிமுக சார்பில் பெருந்துறையில் முன்னாள் அமைச்சரும் இருமுறை எம்.எல்.ஏ.வுமான தோப்பு வெங்கடாசலம் சுயேச்சையாகக் களமிறங்கியிருக்கிறார். அதேபோல நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் சிட்டிங் எம்.எல்.ஏ.சந்திரசேகரனே அதிமுக வேட்பாளருக்கு எதிராக சுயேச்சையாய் போட்டியிடுகிறார். இதேபோல புதுக்கோட்டையில் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக மாவட்ட வழக்கறிஞர் அணி துணைத் தலைவர் நெவளிநாதன் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.
இந்த வகையில் திமுக கூட்டணியில் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி தொகுதியில் திமுக வேட்பாளர் முருகனுக்கு போட்டியாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமானுல்லா சுயேச்சையாக போட்டியிடுகிறார். பெருங்கூட்டத்தோடு பச்சைத் துண்டுஅணிந்துகொண்டு அமானுல்லா பிரச்சாரம் செய்வதைப் பார்த்தால் ஏதோ பெரிய அரசியல் கட்சியின் வேட்பாளர் போல இருக்கிறது.ஆனால் சுயேச்சையாக நிற்கும் இந்த அமானுல்லா, திமுக வேட்பாளர் முருகனுக்கு கிலியை ஏற்படுத்தியிருக்கிறார்.
இதற்குக் காரணம் இருக்கிறது.
“காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமானுல்லா வேப்பனஹள்ளியில் 50 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை வைத்திருக்கிறார்.சிறு காயம் முதல் பெரு அறுவை சிகிச்சை முதல் எல்லாமே இவரது மருத்துவமனையில் இலவசம்தான். மக்களுக்காக இந்த மருத்துவமனையை நடத்தும் அமானுல்லா இது தவிர ஆம்புலன்ஸுகளையும் இலவசமாக இயக்கி வருகிறார். இதனால் தொகுதியில் இவரை அறியாதவர் யாருமில்லை. மக்களிடம் பெரும் செல்வாக்கு பெற்றவர். கடந்த 2019 தேர்தலில் கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக செல்லகுமார் நின்றபோது அவருக்கு வேப்பனஹள்ளியில் முழுமையாக உழைத்தார் அமானுல்லா. தேர்தலுக்காகபெரும் பணத்தையும் செலவழித்தார்.
கடந்த இரு தேர்தலாகவே அமானுல்லா வேப்பனஹள்ளி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டுவருகிறார்..2019 தேர்தலின்போதே வரும் சட்டமன்றத் தேர்தலில் வேப்பனஹள்ளி தொகுதியில் சீட் வாங்கித் தருவதாக செல்லகுமார் உறுதியளித்திருந்தார். ஆனால் இம்முறை தேர்தலில் கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட ஊத்தங்கரை தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், வேப்பனஹள்ளி மீண்டும் திமுகவுக்கே சென்றுவிட்டது. இந்நிலையில்தான் ஆதரவாளர்கள் , பொதுமக்கள் வற்புறுத்தலின் பேரில் சுயேச்சையாகவே களமிறங்கிவிட்டார் அமானுல்லா” என்கிறார்கள் கிருஷ்ணகிரி காங்கிரஸார்.
வேப்பனஹள்ளி தொகுதியில் திமுக வேட்பாளர் முருகனுக்கு அமானுல்லாவால் கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதை திமுக புள்ளிகளும் தங்கள் மேலிடத்துக்குத் தெரியப்படுத்தியுள்ளனர். இதையடுத்து அமானுல்லாவை வாபஸ் பெற வைக்கும் முயற்சிகளை காங்கிரஸும் ஒரு பக்கம் முடுக்கிவிட்டிருக்கிறது.
சுயேச்சையாக போட்டியிடும் அமானுல்லாவிடம் மின்னம்பலம் சார்பாக பேசினோம்.
“இது மூன்றாவது முறை இப்படி வேப்பனஹள்ளியை காங்கிரஸ் இழந்திருக்கிறது. போன முறை முருகன் நின்றார், காங்கிரஸ் சார்பில் உழைத்து ஜெயிக்க வைத்தோம். இம்முறை எங்களுக்கு விட்டுக் கொடுப்பதாக சொல்லியிருந்தார். ஆனால் மீண்டும் அவரே போட்டியிடுவதால் காங்கிரஸ் மீண்டும் புறக்கணிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி காங்கிரஸ் எம்பி செல்லகுமார் அகில இந்திய அளவில் முக்கியமான காங்கிரஸ் தலைவர். அவர் காங்கிரஸ் கட்சியில் அதிகாரம் மிக்க பொறுப்பில் இருக்கிறார். அவர் நினைத்திருந்தால் வேப்பனஹள்ளியை காங்கிரஸுக்கு வாங்கியிருக்கலாம்
இனிமேலும் காத்திருக்க முடியாது என்பதால் மக்களின் வற்புறுத்தலின் பேரில் நான் சுயேச்சையாக நிற்க முடிவு செய்தேன். வெற்றியை நோக்கித்தான் நான் போட்டியிடுகிறேன். நான் இந்தத் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக வெற்றிபெற்றால் 50 படுக்கைகள் கொண்ட எனது இலவச மருத்துவமனையை 200 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக மாற்றுவேன். மக்களுக்கு மேலும் மேலும் சேவை செய்துகொண்டே இருப்பேன்” என்கிறார் அமானுல்லா.
வேப்பனஹள்ளியில் அமானுல்லாவுக்கு கிடைக்கும் ரெஸ்பான்ஸ் திமுக வேட்பாளர் முருகனுக்கு நெருக்கடியை தந்திருக்கிறது.
**-வேந்தன்**
�,”