dமுதல்வருக்கு நன்றி சொன்ன விமானப்படை!

Published On:

| By Balaji

குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தின்போது மீட்புப்பணி துரிதமாக நடைபெற உதவியாக இருந்த உள்ளூர் மக்கள், காவல் துறை மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோருக்கு இந்திய விமானப்படை நன்றி தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் 8ஆம் தேதி நீலகிரி மாவட்டம், குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானபோது, தீயணைப்பு, மீட்பு படையினருடன் காட்டேரி, நஞ்சப்பசத்திர பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தீயை அணைக்க உதவியதுடன், போர்வைகள் மற்றும் பொருட்களை கொண்டு மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இந்த நேரத்தில் மக்களின் உதவி பெரிதாக இருந்தது. அதுபோன்று முதல்வரும் மீட்பு பணிகளை துரிதப்படுத்தவும், காயமடைந்தவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டார். அவ்வப்போது மீட்பு பணிகளை கேட்டறிந்த முதல்வர் சம்பவம் நடந்த மாலை குன்னூர் சென்றார். மீட்புப் பணிகளிலும், இறந்தவர்களின் உடல்களை எடுத்துச் செல்வதற்கும் மாநில அரசு அனைத்து உதவிகளையும் வழங்கி உரிய ஏற்பாடுகளை செய்து தந்தது.

இந்நிலையில் விபத்தின்போது மீட்பு பணியில் உதவிய மக்களுக்கு நேற்று தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு நேரில் சென்று நன்றி தெரிவித்து, கம்பளி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

தொடர்ந்து நஞ்சப்பசத்திரம் மக்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை, உப்பு உள்ளிட்ட பொருட்களை வழங்கி, விமானப்படை சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஹெலிகாப்டர் விபத்தின்போது உதவிய தமிழ்நாடு முதல்வருக்கும், மற்ற பணியாளர்களுக்கும் இந்திய விமானப்படை நன்றி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய விமானப்படை ட்விட்டர் பக்கத்தில்,” நீலகிரியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான பிறகு மீட்புப் பணிகளில் உடனடியாகவும், நீண்ட நேரமாகவும் உதவிய முதல்வர்மற்றும் அவரின் அலுவலகப் பணியாளர்கள், காட்டேரி காவல் துறையினர், உள்ளூர் மக்கள் அனைவருக்கும் எங்களது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share