xஜனாதிபதிக்கு ஆவணங்களை அனுப்பிய ஆளுநர் :அரசு!

politics

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஏழு பேரின் ஆவணங்களையும் ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளதாகத் தமிழக அரசு இன்று(ஏப்ரல் 7) சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளாக நளினி, முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இதில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பேரறிவாளன் தற்போது ஜாமினில் வெளியே உள்ளார்.

இதனிடையே ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரில் ஒருவரான நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார்.

அதில் இந்திய அரசியல் சாசனம் 161 ஆவது பிரிவின் கீழ், தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப அமைச்சரவைக்கு அதிகாரம் உள்ளது. அதிமுக ஆட்சியில் 7 பேரை விடுதலை செய்வது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால் 42 மாதங்களாகியும் ஆளுநர் இந்த தீர்மானத்தை நிலுவையில் வைத்திருப்பது சட்ட விரோதமானது. எனவே ஆளுநரின் ஒப்புதலுக்குக் காத்திருக்காமல் அமைச்சரவை தீர்மானத்தின்படி என்னை விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனிஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணையிலிருந்து வருகிறது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமைச்சரவை தீர்மானத்தின் மீது ஆளுநர் எந்தவித முடிவும் எடுக்காத நிலையில் என்ன உத்தரவைப் பிறப்பிக்க முடியும் என்று கேள்வி எழுப்பி இருந்தனர். அதோடு எழுவர் விடுதலை தொடர்பான அமைச்சரவை தீர்மானத்தில் பேரறிவாளன் விவகாரம் மட்டும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டதா அல்லது ஏழு பேரின் வழக்குகளும் அனுப்பப்பட்டதா என கேள்வி எழுப்பியிருந்தனர். இது தொடர்பாகவும், நளினி முன்கூட்டியே விடுதலை கோரும் வழக்கு தொடர்பாகவும் பதிலளிக்கத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு இருந்தனர்.

இவ்வழக்கு மீண்டும் இன்று(ஏப்ரல் 7) விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு சார்பில் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி, பேரறிவாளன் மட்டுமின்றி ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான ஆவணங்களையும் ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளதாகத் தெரிவித்தார்.

இதனை விசாரித்த நீதிபதிகள் எந்த தேதியில் ஆளுநர் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார் என தெரிவிக்க அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *