நான் கண்ட கலாம்

Published On:

| By Balaji

நா.மணி

2006 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் டெல்லியில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. நம்மை யார் டெல்லியில் இருந்து அழைப்பது என்று யோசித்துக் கொண்டே அழைப்பை ஏற்றேன். பேராசிரியர் மணியா?’ என்றது குரல். ’எஸ் பிளீஸ்….’ என்றேன்.

”குடியரசு தலைவர் மாளிகையில் இருந்து அவரின் தனிச் செயலாளர் செரிடன் பேசுகிறேன்” என்றது குரல். என்னுள் பதற்றம் தொற்றிக் கொண்டது. அதை அவரும் உணர்ந்து கொண்டு நிதானமாக பேசினார். ” நீங்கள் குடியரசு தலைவரை ஒரு விழாவிற்கு அழைத்தீர்களா?” என்றார். “ஆம் சார்” என்றேன். “நீங்கள் கேட்ட தேதியில் வர இயலாது.ஆனால் குடியரசு தலைவர் உங்கள் விழாவிற்கு வர விருப்பம் தெரிவிக்கிறார். டிசம்பர் 21 ஆம் தேதி வர விரும்புகிறார். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?”

நான் என்ன சொல்வது? நாட்டின் தலைக் குடிமகன். அவருடைய வருகைக்காக தவமாய் தவமிருந்து வருகின்றனர். ஆண்டு கணக்கில் முயற்சி செய்து தோற்றுப் போய் உள்ளனர். இந்த நேரத்தில் அவரே வர விரும்புகிறார். மாற்று தேதி கேட்கிறார். “மிக்க மகிழ்ச்சி சார்” என்றேன்.

நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், நடத்தித்தரவிருக்கும் கல்லூரி, குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்குபெற இருக்கும் மாநிலம் முழுவதும் உள்ள குழந்தைகள் என எல்லோரும் மகிழ்ச்சி கடலில் ஆழ்ந்தனர்.

**ஈரோட்டில் முதல் முதலாய் குடியரசுத் தலைவர்**

ஈரோடு மாவட்டத்திற்கு முதல் முதலாக ஒரு குடியரசுத் தலைவர் வருகை தருவதும் இந்த விழா வழியாகத் தான். இதன் பொருட்டு மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் மாவட்ட நிர்வாகம் என பரபரப்பாக இயங்கத் தொடங்கியது. ஊரெல்லாம் இது பற்றிய பேச்சாகவே இருந்தது. குடியரசு தலைவர் மாளிகையில் இருந்து அவருடைய தனிச் செயலர் செரிடன் மீண்டும் பேசினார். “உங்கள் மாநாடு நடக்கும் கலையரங்கத்தின் கொள்ளளவு என்ன?”என்று கேட்டார். “அய்யா விழா ஏற்பாட்டாளர்கள் நாங்கள். விழா நடைபெறும் கல்லூரி எங்களுடையது அல்ல. கேட்டுச் சொல்கிறேன்” எனப் பதிலுரைத்தேன்.

விழா நடத்தும் கல்லூரியின் முதல்வரோ ” மணி நம் ஆடிட்டோரியம் 650 மட்டுமே கொள்ளளவு. வெளியே பந்தலிட்டு, மாவட்டம் முழுவதும் எல்லாப் பள்ளிகளில் இருந்தும் அழைத்து 10000 பேரைத் திரட்டி நடத்துவோம் எனச் சொல்லுங்கள்” என்றார்.

**கலாம் விதித்த கறார் நிபந்தனை**

எனக்கோ பயம். பத்தாயிரம் பேரை எங்கே திரட்டப் போகிறோம். அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளோடு இதைச் செய்ய முடியுமா என நினைத்து கலாம் வரவில்லை என்றால் என்ன செய்வது? அவர் சொன்ன பத்தாயிரத்தில் பாதியாகக் கிழித்துக் கொண்டேன். செரிடனை அழைத்து ” அய்யா அரங்கம் அமைத்து 5000 பேரைத் திரட்டி நடத்துவோம்” என்றேன்.

”அது ஒன்றும் பிரச்சினை இல்லை. நீங்கள் பத்தாயிரம் பேரைக் கூட திரட்டிக் கொள்ளுங்கள். ஆட்சேபணை இல்லை. ஒரே ஒரு குழந்தை கூட சேர் இல்லாமல் நிற்கக் கூடாது. வெயிலில் நிற்கக் கூடாது, சரியா?” என்றார். ”நிச்சயம் சார்” என்றேன்.

”இந்த நிபந்தனைக்கு கட்டுப்படுகிறீர்களா?” என்றார். எனக்கு நா எழவில்லை. விக்கித்து நின்றேன். இப்படியும் ஒரு மனிதரா? விழா மேடைகள் சாலைகள் ஆகியவற்றின் இருமருங்கிலும் மணிக் கணக்கில் நிற்க வைத்து குழந்தைகள் மயங்கி விழுந்த காட்சிகளை கண்டிருக்கிறோம். ஆனால், தான் கலந்து கொள்ளும் விழாவில் ” ஒரே ஒரு குழந்தை கூட நிற்கக் கூடாது. வெயிலில் வெந்துவிடக் கூடாது என்று நிபந்தனையின் பேரில் வருகை தர உத்தரவாதம் கேட்கும் மனிதனுக்கு மறு மொழி கூற என்னிடம் வார்த்தைகள் இல்லை.

” என்ன சார் முடியுமா? முடியாதா? ” என உசுப்பிய பிறகே சுதாகரித்தேன். “கண்டிப்பாக சார் உங்கள் நிபந்தனையை இம்மி அளவும் மீறமாட்டோம்” என்றேன். அலைபேசியைத் துண்டித்து விட்டார்.

**பூச்செண்டு கொடுக்க என்ன தகுதி?**

அதில் இருந்து இரண்டு நாளில் ” உங்கள் மாநாட்டை துவக்கி வைக்க மேதகு குடியரசு தலைவர் மனமுவந்து ஒப்புக்கொண்டிருக்கிறார்” என்று துவங்கும் கடிதம் வந்து சேர்ந்தது. குடியரசு தலைவர் கலந்து கொள்ளும் விழாவைப் பற்றி அதன் நடைமுறைகள் பற்றி கூட பலரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால் அதற்கென தனியாக கட்டுரை எழுத வேண்டும். அதன் பின்னர் விழா ஏற்பாடுகளுக்கான கடிதங்கள் மாவட்ட ஆட்சியருக்கே வரும். அங்கு கடிதம் வந்ததும் உடனடியாக எனக்கு ஓலை வரும். இப்படியாக விழா ஏற்பாடுகளை செய்து கொண்டு இருந்தோம்.

விழா நெருங்கும் போது குடியரசு தலைவர் மாளிகையில் இருந்து ஜெனரல் கந்தசாமி என்று ஒருவர் அழைத்தார். ” உங்கள் மாநாட்டில் குழந்தைகள் சமர்ப்பித்துள்ள ஆய்வு கட்டுரைகளில் மிகச் சிறந்த மூன்று ஆய்வுக் கட்டுரைகளை தேர்வு செய்து அதன் ஆய்வு சுருக்கத்தோடு என் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்” என்றார். துவக்க விழா முடிந்து மூன்றாம் நாள் தான் யார் யாருடைய படைப்புகள் அகில இந்திய மாநாட்டிற்கு தேர்வு பெற்றுள்ளது என்பது தெரியும். முதல் மூன்று படைப்புகளை குடியரசு தலைவருக்கு அனுப்பி முதல் நாளே அதுபற்றி அவர் பேசிவிட்டால் சலசலப்பு வரலாம்” என்றேன்..

“அதுபற்றி எனக்குத் தெரியாது. நானோ நீங்களோ அவரிடமும் இப்போது கேட்க முடியாது. அவர் கூறியபடி அனுப்பி வையுங்கள்” என்றார். மாநாட்டிற்கு சுமார் 200 ஆய்வுக் கட்டுரைகள் வந்திருந்தன. இந்த ஆய்வு கட்டுரைகளை மதிப்பீடு செய்ய பேராசிரியர்கள் ஆய்வாளர்கள் தருவிக்கப்படுவர். மாநாட்டிற்கு பத்து நாட்கள் இருக்கும் போது சாத்தியம் இல்லை. ஈரோட்டில் எங்கள் தொடர்பில் உள்ள பேராசிரியர்களை அழைத்து இரவும் பகலும் படித்துப் பார்த்து மூன்று ஆய்வுக் கட்டுரைகளை தேர்வு செய்து அனுப்பி வைத்தேன். இது பற்றி தொடக்க விழாவில் கலாம் பேசிவிடுவாரோ என்று நினைத்து கொண்டு இருந்தேன்.

விழா நாள் காலையில் அதிகாலை வேறொரு ஜெனரல் அழைத்தார். ” குடியரசு தலைவருடன் வந்து கொண்டு இருக்கும் ஜெனரல் சோப்ரா பேசுகிறேன். அன்று மூன்று குழந்தைகள் பெயரைக் கொடுத்தீர்களே அந்த குழந்தைகளை அழைத்து விழா மேடை அருகே பூச்செண்டு கொடுத்து வரவேற்க நிறுத்துங்கள்” என்றார்.

**அன்பின் தாண்டவம்**

விழா மேடை அருகே குழந்தைகள் பூச்செண்டு கொடுத்து வரவேற்கும் வழக்கம் உண்டு. இதைக் கூட நம்மவர்கள் விழா ஏற்பாட்டாளர்கள் தவறாக பயன்படுத்தி வந்ததை கலாம் அறிந்து வைத்திருந்தார். விழா ஏற்பாட்டாளர்கள் நிர்வாகப் பொறுப்பில் உள்ளவர்கள் தங்கள் பிள்ளைகளை நிறுத்தி வைப்பதை அறிந்திருந்தார். அதையும் தவறாக பயன்படுத்தாத வண்ணம் ஒரு வழிமுறை கண்டு பிடித்தார். அந்த முறையில் விழாவிற்கு வரும் குழந்தைகளே அந்த வாய்ப்பை அனுப்பவும் பெற வேண்டும் என நினைத்தார். சே! என்ன மனிதர் இவர்! அன்று முதல் இன்று வரை நினைக்காத நாளில்லை. வியக்காத நாள் இல்லை.

விழா மேடையில், அவர் அருகில் இருந்து, அவரை நோக்கி துடிக்கும் உள்ளங்களைப் பார்த்தேன். அவர் எழுந்து மைக் அருகே நின்று, ஒரு நிமிடம் எதுவும் பேசாது துடிக்கும் அந்த உள்ளங்களை அன்பொழுகப் ஒரு முறை பார்த்தார்.அவரது உள்ளத்து அன்பின் தாண்டவம் அதில் தெரிந்தது. உதடுகள் துடித்தது. பின்னர் தன் பேச்சைத் துவக்கினார்….

இந்த மாநாட்டின் ஒருங்கிணைப்பில் முக்கிய பங்காற்றிய அனைவருக்கும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அழியாத நினைவுகள் அவை.

**கட்டுரையாளர் குறிப்பு**

நா. .மணி, பேராசிரியர், ஈரோடு அரசு கலைக் கல்லூரி. மாநில குழந்தைகள் அறிவியல் மாநாடு அமைப்புச் செயலாளர்-2006

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share