பொதுக்குழு 9.30 மணிக்கு… தீர்ப்பு 9 மணிக்கு: நீதிபதி வைத்த ட்விஸ்ட்! 

Published On:

| By Guru Krishna Hari

அதிமுக பொதுக்குழுவுக்கு தடைகேட்டு ஓபிஎஸ் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது கடந்த இரண்டு (ஜூலை 7 மற்றும் 8) நாட்களாக விசாரணை நடைபெற்ற நிலையில், இரு தரப்பு வாதங்களையும் இன்று (ஜூலை 8) கேட்டுக்கொண்ட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, இந்த வழக்கின் தீர்ப்பு, வரும் திங்கள் (ஜூலை 11) காலை 9 மணிக்கு வழங்கப்படும் என உத்தரவிட்டுள்ளார். அதிமுகவின் செயற்குழு காலை 9 மணிக்கும்,  பொதுக்குழு காலை 9.30 மணிக்கும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்…  பொதுக்குழு வழக்கின் தீர்ப்பு அன்று  காலை 9 மணிக்கு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார் நீதிபதி. 

இன்று (ஜூலை 8) நடைபெற்ற விசாரணையில், ஈபிஎஸ் தரப்பில் முன்னதாக தங்களது வாதங்களை வைத்தனர். பின்னர், ஓபிஎஸ் தரப்பு தங்களது வாதங்களை வைத்தது.

ஓபிஎஸ் தரப்பில், “2021 டிசம்பர் செயற்குழு தீர்மானத்தின்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தலில் வெற்றிபெற்றனர். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் குறித்து தேர்தல் ஆணையத்துக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுக்குழு ஒப்புதல் வழங்காததால் இரு பதவிகளும் காலியாகிவிட்டதாக முன்வைத்த வாதம் தவறு.

 ஒட்டுமொத்தமாக உட்கட்சித் தேர்தல் நடந்துள்ள நிலையில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் மட்டும் காலியாக இருப்பதாக எப்படிக் கூறமுடியும்? கட்சி விதி திருத்தங்களுக்கு பொதுக்குழு ஒப்புதல் தேவையில்லை. ஏனென்றால், திருத்தம் அமலுக்கு வந்துவிட்டது. ஒப்புதல் என்பது வழக்கமான நடைமுறைதான். பொதுக்குழுவில் கட்சி விதிகளில் திருத்தம் கொண்டுவந்ததற்கு ஒப்புதல் அளிக்கும் தீர்மானம் கொண்டுவரப்படாத நிலையில் எப்படி பதவிகள் காலியாகும்?இரு பதவிகளும் காலியாக உள்ளதாக முன்வைக்கப்பட்ட வாதங்கள் ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல. தலைவர்கள் உயிருடன் இல்லாதபோதுதான் பதவி காலி எனக் கருத முடியும். அதிமுகவை பொறுத்தவரை 1987 மற்றும் 2016இல் அப்படி ஒரு நிலை ஏற்பட்டது. கட்சி நிறுவனர் எம்.ஜி.ஆர். இறந்தபோது என்ன ஆனது என அவர்கள்  விளக்கவில்லை. 

சிறப்புப் பொதுக்குழுவாக இருந்தாலும், வழக்கமான பொதுக்குழுவாக இருந்தாலும் கட்சி விதிப்படி ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும்தான் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு இல்லை என்பது தவறு” என வாதத்தை வைத்தனர், ஓபிஎஸ் தரப்பினர்.

இரு தரப்பு வாதங்களையும் இன்று (ஜூலை 8) ஏற்றுக்கொண்ட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, இந்த வழக்கின் தீர்ப்பு வரும் திங்கள் (ஜூலை 11) காலை 9 மணிக்கு வழங்கப்படும் என உத்தரவிட்டுள்ளார்.  இதையடுத்து பொதுக்குழு நடக்குமா நடக்காதா என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

திங்கள் கிழமை காலை 7.30 டு 9 மணி  ராகு காலம். அதன் அடிப்படையிலேயே வரும் 11 ஆம் தேதி காலை 9 மணிக்கு செயற்குழு என்றும், அடுத்து 9.30 மணிக்கு பொதுக்குழு என்றும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் தீர்ப்பு நேரம் 9 மணி என அறிவிக்கப்பட்டது, அடுத்த ட்விஸ்ட் ஆக ஆகியுள்ளது. 

ஜெ.பிரகாஷ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share