ராஜஸ்தான் மாநில துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் அம்மாநில முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் இடையிலான பனிப்போர் வெடித்து பைலட் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களை டெல்லி அழைத்துச் சென்றுள்ளார். ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசுக்கு இதனால் சிக்கல் ஏற்பட்டிருக்கும் நிலையில், சச்சின் பைலட் பாஜகவுக்கு செல்லப் போவதாகவும் தகவல்கள் வந்துகொண்டிருந்தன.
இந்நிலையில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று (ஜூலை 13) கூடியிருக்கும் நிலையில், ராஜஸ்தான் காங்கிரஸ் பிரமுகர்கள் இருவரின் வீடுகளில் திடீர் ஐடி ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.
நேற்று இரவு செய்தியாளர்களைச் சந்தித்து, ‘ராஜஸ்தான் காங்கிரஸ் அரசுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை” என்று தெரிவித்த மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் ராஜீவ் அரோரா, தர்மேந்திர ரத்தோர் ஆகிய இரு காங்கிரஸ் தலைவர்களின் வீட்டில் இன்று காலை முதல் ஐடி சோதனை நடைபெற்று வருகிறது. வரி ஏய்ப்பு குற்றச்சாட்டின் பேரில் ஜெய்ப்பூர் மற்றும் கோட்டாவில் இரு தலைவர்களுடன் தொடர்புடைய ஐந்து வளாகங்களில் சோதனை நடப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தார்கள். டெல்லி, ஜெய்ப்பூர், மும்பை மற்றும் கோட்டாவில் இன்று அதிகாலை தொடங்கப்பட்ட இந்த வருமானவரி சோதனையின் ஒரு பகுதியாக 80 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ரெய்டில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
டெல்லியில் முகாமிட்டிருக்கும் சச்சின் பைலட்டும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் இன்று ஜெய்ப்பூரில் முதல்வர் அசோக் கெலாட் கூட்டிய கூட்டத்தில் கலந்துகொள்ளாத நிலையில்தான் இந்த ரெய்டு நடத்தப்பட்டிருக்கிறது.
நேற்று இரவு டெல்லியின் தூதுவர்களாக ஜெய்ப்பூர் சென்ற ரந்தீப் சிங் சுர்ஜேவாலா மாநில காங்கிரஸ் பிரமுகர்களோடு பேசினார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “குடும்பத்தில் ஒரு பிரச்சினை என்றால் குடும்பத்துக்குள் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். வெளியே செல்லக் கூடாது. சச்சின் பைலட்டிடம் கடந்த இரு நாட்களாக தொடர்ந்து பேசி வருகிறேன். அவரது குரலுக்கு செவிமடுக்க காங்கிரஸ் தலைமை தயாராக உள்ளது. எனவே ராஜஸ்தான் அரசுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. ஐந்து வருடத்தை நிறைவு செய்வோம்” என்று கூறினார். சச்சின் பைலட் தனக்கு நெருக்கமானவர்களிடம் பேசும்போது, “நான் பாஜகவில் சேரப் போவதில்லை” என்று கூறியிருக்கிறார்.
இதற்கிடையில் இன்று (ஜூலை 13) ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பனியா, “சச்சின் பைலட் இப்போது பாஜகவில் இருக்கிறார். காங்கிரஸ் மீதான பாஜகவின் அணுகுமுறை எல்லாருக்கும் தெரியும். நாங்கள் பாஜகவிடம் இருந்து சான்றிதழ் வாங்கத் தேவையில்லை. காங்கிரசில் அனைத்து தலைவர்களும் நிர்வாகிகளும் மதிக்கப்படுகிறார்கள்” என்று கூறியிருந்தார். இதுபற்றிய வீடியோவையும் ஏ.என்.ஐ. வெளியிட்டது.
இதுகுறித்து உடனடியாக தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்த பனியா, “அந்த வீடியோவில் என்னிடம் சிந்தியா பற்றி கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்த நான் சிந்தியா இப்போது பாஜகவில் இருக்கிறார் என்று சொல்வதற்கு பதிலாக பைலட் என்று தவறுதலாக உச்சரித்துவிட்டேன். தவறுக்கு வருத்தம் தெரிவிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
**-வேந்தன்**�,